விஷால் பதவி விலகாவிட்டால் விரட்டுவோம்: போட்டி தயாரிப்பாளர்கள் பேட்டி
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலின் முயற்சியால் கோலிவுட் திரையுலகில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவரது நடவடிக்கைகளை மற்ற மாநில திரையுலகினர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் விஷாலுக்கு எதிரான ஒருசில தயாரிப்பாளர்கள் நேற்று கூட்டம் ஒன்றை நடத்தி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் ஒராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்று கூறி இருந்தார். 2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
54 நாட்கள் சினிமா ஸ்டிரைக் காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் படத்துக்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைக்கிறது. மற்றவர்களது படங்களுக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை.
எனவே விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது நாங்கள் விரட்டுவோம். புதிதாக தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து தயாரிப்பாளர் சங்கத்தை மாற்ற முன்வர வேண்டும். தமிழர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். விஷால், தனது படத்தை பற்றி மட்டும் கவலைப்படாமல், மற்ற படங்களை பற்றியும் கவலைப்பட வேண்டும் என்று அனைவரும் பேசினார்கள்.