பழம்பெரும் பாடகி சரளா அம்மாவுக்கு நிதியுதவி செய்த விஷால்
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியினர் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்களை செய்து வருகின்றனர். முதல்கட்டமாக நலிந்த கலைஞர்களை தேடிப்பிடித்து உதவி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பரவை முனியம்மா, கொல்லாங்குடி கருப்பாயி உள்பட பலருக்கு பொருளாதார உதவி செய்து வரும் நடிகர் சங்கம், தற்போது மேலும் ஒரு நலிந்த கலைஞருக்கு உதவி செய்துள்ளது. கடந்த 1967ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பத்மினி நடித்த ‘பேசும் படம்’ திரைப்படத்தில் ‘நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க’ என்ற புகழ்பெற்ற பாடல் இடம்பெற்றது.
இந்த பாடலை சூலமங்கலம் ராஜலட்சுமி, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர்களுடன் இணைந்து பாடிய பாடகி சரளா அம்மா என்பவர் தற்போது வறுமையில் வாடுவதாகவும் தனது மகள்களுடன் அவர் கஷ்டப்படுவதை பத்திரிகைகள் மூலம் அறிந்த நடிகர் சங்க செயலாளர் விஷால், உடனே அவர்களுக்கு தனது தேவி அறக்கட்டளை மூலமாக மாதம் ரூபாய் 5,000 அளிக்க முன்வந்துள்ளார். மேலும் சரளா அம்மாவுக்கு தேவையான மருத்துவ உதவியை தனது சொந்த செலவில் செய்து தருவதாகவும் அறிவித்து உள்ளார்.
இதனால் சரளா அம்மாவின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததோடு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.