விஷ்ணுப்ரியா தற்கொலை கடித்தத்தில் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளியீடா? திடுக்கிடும் தகவல்

விஷ்ணுப்ரியா தற்கொலை கடித்தத்தில் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளியீடா? திடுக்கிடும் தகவல்
vishnu piriya
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டு பகுதியின் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த மாதம் 18 ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அவரது தற்கொலை குறித்து மேலும் ஒரு கடிதம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சிபிசிஐடி விசாரணை செய்து வரும் இந்த வழக்கில் விஷ்ணுப்ரியாவிடம் செல்போனில் தொடர்பு கொண்ட நபர்களிடம் விசாரணை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷ்ணுப்ரியாவின் அறையில் எடுக்கப்பட்ட அவரது கடித்தத்தின் ஒருசில பக்கங்கள் போலீசாரால் மறைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. மறைக்கப்பட்ட அந்த பக்கங்கள் நேற்று ஊடகங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட அந்த பக்கத்தில், “”என்னுடைய தற்கொலை வீடியோ எனது கையடக்க கணினியில் (டேப்லெட்) இருக்கும். அதை பாருங்கள். நான் இறந்த பிறகு என் கையடக்க கணினியை மகேஸ் அக்காவிடம் கொடுத்துவிடுங்கள். கீதாஞ்சலிருக்கு ரூ.4 ஆயிரம் கொடுங்கள். திவ்யாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவிடுங்கள். பத்திரிக்கையாளர்கள், போலீசாருக்கு எனது வேண்டுகோள், என்னை அமைதியாக சாகவிடுங்கள். எனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம்.

நான் கத்தியால் அறுக்கப்படுவதை வெறுக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பல பிரேத பரிசோதனைகளை பார்த்து உள்ளேன். அதனால்தான் எனக்கு அது நடக்கக்கூடாது என விரும்புகிறேன். எனது தற்கொலை தொடர்பாக உங்களுடைய அனைத்துவித சந்தேகங்களும் வீடியோ கேசட்டில் தெளிவாக்கப்படும்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. மேலும், அந்த கடிதத்தின் கீழ் விஷ்ணுபிரியா என்று கையெழுத்தும் போடப்பட்டு இருந்தது.

மேலும் அந்த கடிதத்தில் அம்மாவுக்கு என்று குறிப்பிட்டு ஏ.டி.எம். கார்டு ரகசிய எண், சிறிய மடிக்கணினி ரகசிய எண், செல்போன் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் அந்த கடிதத்தில் 15-7-15 என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அந்த கடிதத்தை விஷ்ணுபிரியா முன்பே எழுதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஷ்ணுபிரியாவின் அறையில் இருந்து ஏற்கனவே மீட்கப்பட்ட கடிதம், மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே கைப்பற்றப்பட்ட கடிதத்தில் உள்ள கையெழுத்து விஷ்ணுபிரியா எழுதியது தானா? அவரது மடிக்கணினியில் இருந்து விவரங்கள் எதுவும் அழிக்கப்பட்டு உள்ளதா? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தற்போது, விஷ்ணுபிரியா எழுதியதாக மேலும் 2 பக்க கடிதம் வெளியாகி இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply