எனது மனத்தடைகளை உடைத்த படம் ‘விவேகம்; காஜல் அகர்வால்
கடந்த ஆண்டு காஜல் அகர்வாலுக்கு சிறப்பான ஆண்டு என்றே கூற வேண்டும். அஜித், விஜய், சிரஞ்சீவி, ராணா ஆகியோர்களுடன் நடித்ததால் தனக்கு 2017-ம் ஆண்டு சிறந்த காவிய ஆண்டாக இருந்தது என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காஜல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கடிதத்தில், ”2017-ம் ஆண்டில் நடந்ததை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மெகா ஸ்டார் சிரஞ்சீவி சாருடன் தெலுங்கில் நடித்த ‘கைதி 150’ முதலில் ரிலீஸ் ஆனது. அதற்குப் பிறகு என் நண்பர் ராணாவுடன் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ தெலுங்குப் படத்தில் நடித்தேன். அது ஒரு அழகிய அனுபவம். என் வழிகாட்டி தேஜா சாருடன் இணைந்து பணிபுரிந்ததால் நிறைய கற்றுக்கொண்டேன்.
தமிழில் அஜித் சாருடன் நடித்த ‘விவேகம்’ எனக்கு மிக சவாலான படம். என்னுடைய மனத்தடைகளை பல்வேறு வழிகளில் உடைத்ததில் ‘விவேகம்’ படத்திற்கு பங்கு உள்ளது. அஜித் சார், சிவா சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு உற்சாகம் கிடைத்தது. அந்த நாட்களை மறக்க முடியாது.
என் ஃபேவரைட் நடிகர் விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தின் மூலம் மீண்டும் நடித்ததில் மகிழ்ச்சி. என் இதயத்திலிருந்து நன்றிகளை தெரிவிக்கிறேன். உங்களின் அன்பும், வாழ்த்தும் என்றும் எனக்குத் தேவை” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.