ஒரே நேரத்தில் 40 இடங்களில் சிபிஐ சோதனை. வியாபம் ஊழலில் சிக்குபவர்கள் யார் யார்?
மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வியாபம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் 40 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளதால் இவ்விரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் தொழில் முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் மாநில அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். மேலும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் நுழைவுத் தேர்வுகளும் இதன் மூலம் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் நடத்துவதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாகவும், இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சுமார் 40 பேர் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் வியாபம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வியாபம் ஊழல் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த ஊழல் விசாரணையை கையில் எடுத்த சி.பி.ஐ., உடனடியாக விசாரணையை மேற்கொண்டு 105க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தது மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வியாபம் ஊழல் தொடர்பாக மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உள்பட்ட நகரங்களான போபால், இந்தூர், ஜபல்பூர், உஜ்ஜெயின், ரெவா, லக்னோ மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களில் 40 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு போபால் சிறையில் இருக்கும் மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சி.பி.ஐ. அதிகாரிகளின் அதிரடி சோதனையால் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.