சாவு வீட்டில் தப்பாட்டம் அடிக்கும் இளைஞனுக்கும், அதே மாதிரி சாவு வீட்டில் ஒப்பாரி பாட்டு பாடும் இளம்பெண்ணுக்கும் ஏற்படும் காதல்தான் விழா. இந்த காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலை வளர்க்கவேண்டுமானால் அந்த ஊரில் ஒரு சாவு விழ வேண்டும். இதுவரை யாரும் சொல்லாத கதையோட்டத்தில் விறுவிறுப்பான திரைக்கதையில் விழா ரசிகர்களை பெரிதும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
நாயகன் மகேந்திரன் சாவு வீட்டில் தப்பு அடித்து பிழைக்கும் ஒரு இளைஞன். சாவு வீட்டில் ஒப்பாரி பாட்டு பாடும் தனது பாட்டிக்கு உடல்நலமில்லாததால் பாட்டிக்கு பதில் ஒப்பாரி பாட்டு பாட வரும், நாயகியாக வருகிறார் மாளவிகா மேனன். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் கொள்கின்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க ஒரு சாவு விழாதா? என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு பெரியவர் கிராமத்து மக்களுக்கு பலவித நன்மைகள் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார் . ஆனால் திடீரென அவர் எதிர்பாராமல் இறந்துவிடவே, பெரியவரின் மனைவி ஜெயலட்சுமியிடம் பெரியவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என கிராமத்து மக்கள் கோரிக்கை வைக்க ஜெயலட்சுமி மறுக்கிறார். வெளிநாட்டில் படித்துவிட்டு கிராமத்துக்கு திரும்பும் தன் பேரனுக்கு அவனது மாமன் மகளை திருமணம் செய்துவைக்க ஜெயலட்சுமி முயல, ஆனால் பேரனோ தாழ்ந்த ஜாதி பெண்ணை காதலிக்கிறார். இது தெரிந்து ஆவேசப்படும் ஜெயலட்சுமியிடம் ‘தாத்தா ஊருக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் மாமன் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறான். அதனால் ஜெயலட்சுமி கிராமத்துக்கு தேவையான உதவியை செய்கிறார்.
இந்நிலையில் மகேந்திரன் தன் நண்பர்களின் உதவியோடு பெரியவரின் பேரனுக்கும் தாழ்ந்த ஜாதி பெண்ணுக்கும் ரகசிய திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மகேந்திரனையும் அவனது நண்பர்களையும் தன்னுடைய வீட்டில் அடைத்து பூட்டி வைக்கிறார். இந்நிலையில் மாளவிகா மேனனுக்கு அவரது விருப்பம் இல்லாமலேயே கட்டாய நிச்சயதார்த்தம் நடக்கிறது.
இறுதியில் மகேந்திரன் ஜெயலட்சுமியிடம் இருந்து தப்பித்து மாளவிகாவை கரம் பிடித்தாரா என்பதை அதிரடி க்ளைமாக்ஸில் கூறியிருக்கிறார் இயக்குனர்.
மகேந்திரன் சிறுவயதில் இருந்தே நடித்து வருவதால் நடிப்பு இயல்பாக வருகிறது. தப்பாட்டம் அடிப்பது, காதலியுடன் காதல் பார்வை பார்ப்பது போன்ற காட்சிகளில் இயல்பாக நடித்துள்ளார்.
இவன் வேற் மாதிரி’படத்தில் நாயகியின் தங்கையாக வந்தவர்தான் மாளவிகா மேனன். இந்த படத்தில் இவருக்கு கனமானவேடம். கிராமத்துபெண்ணாகவே வாழ்ந்திருக்கின்றார்.
சிக்கலான கதை கொண்ட இந்த படத்தை தனது தெளிவான திரைக்கதையால் குழப்பமில்லாமல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் பாரதி பாலகுமாரன். ஜேம்ஸ் வசந்தன் இசையில் மதன் கார்க்கியின் செத்துப்போ செத்துப்போ என்ற பாடல் மிக அருமை.
மொத்தத்தில் உற்சாகமாக கொண்டாட வேண்டிய விழாதான்.