கிறிஸ்தவர்களாகிய நாம், கட்டாயம் ஜெபிக்க வேண்டும். ஏனெனில் ‘சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்’ என்ற கட்டளையை இறைமகன், லூக்கா 18:1 அதிகாரத்தில் அருளியுள்ளார். இதனால் இறை வழியில் நடப்பவர்களாய், இடைவிடாமல் ஜெபிக்கவேண்டும்.
ஜெபிக்கவேண்டுமா?, எனக்கு ஜெபிக்க தெரியாதே?, எப்படி ஜெபிப்பது… என உங்களுக்குள் குழம்பி தவிக்காதீர்கள். ஜெபம் என்பது நமக்கும், இறைவனுக்கும் இடையே பேசிக்கொள்ள உதவும் மொழி மட்டுமே. அதை எப்படி வேண்டு மானாலும் அமைத்துக்கொள்ளலாம். இப்படி தான் ஜெபிக்கவேண்டும், இங்கு மட்டும் தான் ஜெபிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது.
இறைவனிடம் நமக்கு தெரிந்த முறையிலே ஜெபிக்கலாம். நாம் இருக்கும் இடத்திலே இறைவனை போற்றி புகழலாம். ஒரு தகப்பனுக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் எப்படி இருக்குமோ, அந்த நடையிலே நம்முடைய தேவனிடமும் ஜெபத்தின் மூலம் பேசலாம். நமக்கு வேண்டியதை, உரிமையாய் தேவனிடம் கேட்கலாம்.
இறைமகன் இயேசு ஜெபிப்பதில் வல்லவர். அவரின் ஜெப வாழ்வை பற்றி வேதத்தில் பல குறிப்புகள் உள்ளன. அவரோ (இயேசு கிறிஸ்து) ‘வனாந்தரத்தில் தனித்துப் போய் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்’ (லூக் 5:16). ‘அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு சென்றார்’ (மாற்கு 1:35) என பல இடங்களில் இறைமகனின் ஜெப வாழ்வு வெளிப் படுகிறது.
இறைமகன் இயேசு தனிமையில் ஜெபிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதையே மேலுள்ள வசனங்களும் எடுத்துரைக்கின்றன. எதற்காக இந்த தனிமை ஜெபம்? என சிந்தித்தால் நம்மை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சி என்ற பதில் கிடைக்கும்.
இறைமகன் என்றாலும் இயேசு தனிமை ஜெபத்தின் மூலமாகவே தன்னைத் திடப்படுத்தி கொண்டார். எப்படியென்றால், ‘அவர் 40 நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார், இதன் மூலமாய் அவர் அதிகமான பலத்தை பிதாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்’ (ஏசா 61:1,2).
இவ்வாறு ஜெபத்தினால் கிடைக்கப்பெற்ற அபிஷேகத்தை கொண்டே உலகில் பல அதிசயங்களையும், எண்ணிலடங்காத அற்புதங்களையும் செய்தார் என்பதை வேதத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதே பாடத்தைதான் இயேசு தம்முடைய பிரதான சீடனாகிய பேதுருவுக்கும் கற்றுக் கொடுத்தார்.
‘பேதுருவே முதலில் நீ குணப்படு, பின்பு மற்றவர்களை குணப்படுத்தும்படி செல்’ என்று சொன்னதாக லூக்கா 22:32 அதிகாரத்தின் பின்பகுதியில் வாசிக்க முடிகிறது. அரைகுறை விசுவாசம் என்ற நோயிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள விசுவாசம் நிறைந்த ஜெபம் தேவைப்படுகிறது. விசுவாசமில்லாத ஜெபம், செல்லாத காசாகவே கருதப்படும்.
ஒருவர், ஊமை ஆவி பிடித்த தன் மகனை இயேசுவின் சீடர்களிடம் கொண்டுவந்து காண்பிக்கிறார். ஏனெனில், அவர்கள் இயேசுவோடு இருப்பவர்கள், அவர்களும் இயேசுவைப் போல அற்புதங்களை செய்வார்கள் என்கிற விசுவாசத்துடன் முதலில் சீடரிடம் செல்கிறார். ஆனால் சீடர்களினால் அந்த பிசாசை விரட்ட முடியவில்லை. அவர்கள் இயேசு விடம் சென்று இந்த காரியத்தை அறிவிக்கிறார்கள்.
இதை அறிந்த தேவன் இப்படியாக கடிந்து கொள்கிறார், அவர் (இயேசு): ‘விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்’ (மாற்கு 9:19). உடனே, இயேசு முதலில் அந்த மனுஷனைப் பார்த்து, ‘நீ விசுவாசிக்ககூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்’ என்றார் (மாற்கு 9:23).
இயேசுவின் வார்த்தையைக் கேட்ட அந்த மனுஷன் ‘விசுவாசிக்கிறேன் ஆண்டவரே (ஆனாலும்), என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்’ (மாற்கு 9:24).
இத்தகைய ஜெபத்தை கேட்ட இயேசு, அவனுக்கு விசுவாசத்தைக் கொடுத்தார். இந்த விசுவாசத்தின் மூலம் அவனுடைய மகன் குணப்பட்டதைப் பார்க்க முடிகிறது.
நாமும் விசுவாசமாய் ஜெபிக்க கற்றுக்கொண்டால் தேவனின் சகல நன்மைகளையும் ஜெபத்தினால் பெறமுடியும். ஏனெனில் ‘கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்’ (மத் 7:8) என்று வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதை போன்றே விசுவாசத்துடன் ஜெபிக்கவேண்டும்.
தாவீதின் வாழ்க்கையில் இத்தகைய தேவ பலன் இருந்தது. கோலியாத்திற்கு எதிராக நின்ற இஸ்ரவேல் வீரர்கள் அனைவருமே பயத்துடன் காணப்பட்டனர். ஆனால் தாவீதிற்கு மட்டும் பயம் உண்டாகவில்லை. அதற்கு பதிலாக தேவன் மீதான விசுவாசத்தை ஜெபத்தினால் பலப்படுத்தி தைரியமாய் எதிர்த்து நின்றார். இதுபோலவே நம்மை போராட்டங்கள், பிரச்சினைகள், எதிர்ப்புகள் ஆகியவை சூழ்ந்து நெருக்கும் போது, தாவீதை போல ஜெபத்தினால் நம்மை நாமே பலப்படுத்தி கொள்ளவேண்டும்.
தாவீதை சவுல் அரசன் ஏளனமாக பேசி தளர்ந்து போக முயற்சித்தப்போதும், தன்னுடைய ஜெபத்தினால் கோலியாத்தை வீழ்த்தி சாதித்து காண்பித்தார்.
லூக்கா 11:11,13–ல் இயேசு கூறியதை போன்றே: ‘உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது நிச்சயம் அல்லவா’ என்று ஜெபத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்.
தேவ பிள்ளைகளே! கர்த்தருடைய சமூகத்திலே காத்திருந்து ஜெபிப்பது வீணான நேரமல்ல. பிதாவோடு உறவாடுகிற நேரமெல்லாம், நீங்கள் பலத்தின்மேல் பலமடைகிற நேரமாகும். வெற்றி வாழ்க்கை, உங்களுடைய ஜெபத்தில் தான் இருக்கிறது. இதனால் குடும்பமாய் ஜெபியுங்கள்; விழித்திருந்து ஜெபியுங்கள். தேவனின் வீடுகளான தேவாலயங்களை நோக்கிச் சென்று தேவனை தேடுங்கள்.
இல்லையேல் இருக்கும் இடத்திலே ஜெபித்து தேவனைத்தேடி நாடுங்கள். உங்களின் பிள்ளைகளுக்கு தேவனின் மகிமையை உணர்த்தி ஜெபிக்க கற்றுக்கொடுங்கள். கடவுளை அன்பு செய்யும் பிள்ளைகள் ஜெப வாழ்க்கையில் இருந்து தப்பிப்போவதே இல்லை. ஆதலால் இறைவனை பிரார்த்திக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். பலனடையுங்கள்…!