கோஹ்லியின் அபார இரட்டை சதம். வலுவான நிலையில் இந்திய அணி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. கேப்டன் விராத் கோஹ்லி மேற்கிந்திய தீவு மண்ணில் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி அன்னிய மண்ணில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.
மேலும் மிக அபாரமாக பேட்டிங் செய்த அஸ்வின் 113 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியபடுத்தினார். தவான் 84 ரன்களும், சஹா 53 ரன்களும் குவித்தனர்.
இந்நிலையில் முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக வர்ணனையாளர்கள் கூறி வருகின்றனர்.