சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவின்படி, தினந்தோறும் சுமார் அரை மணிநேரம் நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, நமது இளமையை மேலும் ஏழாண்டுகள் நீட்டிக்க வைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய இதயவியல் குழுமத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால், மாரடைப்பினால் ஏற்படும் பாதிப்பு, சரிபாதிக்கும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் தலைமை வகித்த பேராசிரியர் சஞ்சய் ஷர்மா, ‘முதுமை தவிர்க்க முடியாத ஒரு பருவம் என்றாலும், அதனை தள்ளிப்போட இதுபோன்ற உடற்பயிற்சிகள் அவசியம்’ என்கிறார்.
மேலும், நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி சுமார் மூன்று முதல் ஏழாண்டுகளை நமது வாழ்நாளில் அதிகரிக்க உதவும் எனவும், மன அழுத்தம், புரிதிறன் செயல்பாட்டை இது கூட்டுவதால் ‘டிமென்ஷியா’ போன்ற மறதி நோய் உண்டாவதையும் தடுக்கும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக, அவர் கூறினார்.
அத்துடன், அந்தப் பேராசிரியர், இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர் ஒரு விசித்திரமான ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், ஓட்டப் பயிற்சி செய்யக்கூடாது, மாறாக மற்றவர்களிடம் பேச முடியும் வேகத்தில் நடக்க வேண்டும். அதற்காக, பாடக்கூடிய அளவிலான வேகத்தில் நடக்கக் கூடாது’ என்கிறார்.
எழுபது வயதில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், பொதுவாக 80 வயதில் ஏற்படும் இதய துடிப்பில் ஏற்படும் இடையூறுப் பிரச்சனையில் இருந்து தம்மை காத்துக்கொள்ள முடியும்.