நான் அதிபரானதும் எடுக்கும் முதல் நடவடிக்கை போர்தான். டொனால்ட் டிரம்ப் சூளுரை
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளதால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இரவுபகலாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நான் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக போர் தொடுப்பேன் என்று டொனால்டு டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே தீவிரவாதிகளுக்கு எதிரான பேச்சுக்களின் மூலம் தனது பிரச்சாரத்தி செய்து மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள அவர் அவ்வப்போது முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்படும் என்பது உள்பட ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பேசி வருகிறார். ஆனால் இந்த கருத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில், சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: “நம்மை அழித்தொழிக்க நினைக்கும் மக்கள் இங்கு இருக்கின்றனர். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக போர் தொடுப்பேன். ஆம், இது அவர்களுக்கு எதிரான போர். ஆனால் அந்தப் போரில் வெகுசில அமெரிக்க வீரர்களே நேரடியாகக் களத்தில் இறக்கப்படுவார்கள் அவர்களைக் கொண்டே ஐ.எஸ். இயக்கத்தை வெற்றி காணும் வகையில் உளவுப் பிரிவுகள் செயல்படும்.
அமெரிக்காவுக்கு இப்போது மிகத் தேவையானது சக்தி வாய்ந்த உளவு அமைப்புகளே. குறைவான வீரர்களுடன் சிறந்த வியூகம் வகுத்து ஐ.எஸ். அழிக்கப்படும். ஐ.எஸ்.-க்கு எதிரான போரில் நேட்டோ படைகள் பயன்படுத்தப்படும். ஏனெனில் நேட்டோ படைகளுக்கு தேவைக்கு அதிகமாகவே அமெரிக்கா உதவி செய்துள்ளது’ என்று பேசினார்.