விடுதலைப்புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜீத் அல் ஜூசேன் அறிக்கை
இதுவரை ராஜபக்சேவின் இலங்கை அரசு மட்டுமே போர்க்குற்றத்தில் ஈடுபட்டு வந்ததாக அனைவருமே குற்றம் சுமத்திய நிலையில் தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது பல்வேறு மனித உரிமைகள் மீறல் நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி, அந்த விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஆணையர் ஜீத் அல் ஜூசேன் இன்று வெளியிட்டுள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை அரசு மட்டுமின்றி விடுதலைப்புலிகள் இயக்கமும் பல்வேறு போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளன. இருதரப்பும் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர். இலங்கை ராணுவம், கடற்படை, சிஐடி ஆகிய தரப்பினர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டோரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேபோல், சர்வதேச அளவில் இலங்கையில்தான் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பூலித்தேவன், நடேசன், அவரது மனைவி ஆகியோரும் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பகத்தன்மையாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த, உள்நாட்டு நீதிமன்றம் உகந்ததல்ல. சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். நாங்கள் போரின் போது நடந்த குற்றங்கள் குறித்து, இலங்கையில் மக்களை சந்தித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு ஒத்துழைக்கவில்லை”
இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஆணையர் ஜீத் அல் ஜூசேன் கூறியுள்ளார்.