இனி, வீடுகளுக்கும் உண்டு வாரண்டி
நாம் வாங்கும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் மின்னணு சாதனங்களுக்கும் பராமரிப்புச் சேவையை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. அதேபோல இப்போது நாம் வாங்கும் வீடுகளுக்கும் முழுமையான பராமரிப்புச் சேவையை (Warranty) கட்டாயம் வழங்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் மசோதா வலியுறுத்துகிறது. அதாவது பராமரிப்பு சேவை மட்டுமல்லாமல், கட்டுமானக் குறைபாடுகளால் ஏற்படும் சேதங்களையும் சீர்செய்வதையும் உள்ளடக்கியதாக மாறியிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்துகொண்டிருந்த ரியல் எஸ்டேட் துறை, சமீபத்தில் அமலான ரியல் எஸ்டேட் மசோதாவால் நம்பிக்கை பெறத் தொடங்கியிருக்கிறது. கட்டுமானக் குறைபாடுகளைக் கட்டாயமாக ஐந்து ஆண்டுகள் வரை சீரமைத்துத் தரவேண்டிய பொறுப்பு கட்டுநர்களுக்கு இருக்கிறது என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னர், சாதாரணமான பராமரிப்புக் காலம் இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இருந்தது.
பெரும்பாலான நேரங்களில், கட்டுநர்கள் அளிக்கும் பராமரிப்பு குடியிருப்பின் அறைக்கலன்களுக்கானதாக மட்டுமே இருந்தது. இதில் கட்டுமானப் பிரச்சினைகளைப் பற்றி எந்த அம்சங்களும் இடம்பெற்றதில்லை. ஆனால், இப்போது முதல்முறையாக, கட்டுநர்கள் வீடுகளுக்கான கட்டுமானக் குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்கத் தொடங்கியிருக்கின்றனர்.
வீடுகளுக்குப் பராமரிப்பு அளிக்கும் இந்தத் திட்டம் இப்போது பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது. அதுவும், குறிப்பாகக் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்துக்குப் பிறகு, இந்தத் திட்டத்துக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. வீடு வாங்குபவர்கள் இப்போது திட்டங்களின் கட்டுமான நிலைத்தன்மை பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகின்றனர். இந்தக் கட்டுமானப் பராமரிப்பு வீடு வாங்குபவர்களுக்கு ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அத்துடன், இந்த வழிமுறை, கட்டுமானக் குறைப்பாடுகளால் ஏற்படும் விபத்துகளுக்குக் கட்டுநர்களைப் பொறுப்பாக்குகிறது.
உதாரணமாக, சமீபத்தில் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு வில்லா திட்டத்தில் ‘10+10 பராமரிப்பு’ அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பராமரிப்பு, என்பது இந்திய ரியல் எஸ்டேட் மசோதா 2016-ன்படி, ஒரு சட்ட பிணைப்பு ஆவணம். இதில் கட்டுமான அம்சங்களான அடித்தளம், நீர்த்தடுப்பு, பிளம்பிங், மின் இணைப்பு போன்றவையும் அடங்கும். “வீடு வாங்குபவர்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பராமரிப்பு பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். இந்தக் காலகட்டத்துக்குள் அவர்கள் வீட்டை மற்றவர்களுக்கு விற்றாலும் அது பத்து ஆண்டுவரையிலான பராமரிப்புக் காலம் வரை தொடரும்” என்று சொல்கிறார் கேமியா ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் கே.கே. குலோத்துங்கன்.
அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சிகளைத் தாண்டியும், கட்டுநர்கள் கட்டுமான உத்திரவாதத்தில் வீடு வாங்குபவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கத் தயாராக இருக்கின்றனர். “வீடு வாங்கிய பிறகு, வீட்டுக்காகச் செய்யப்படும் செலவுகள் பெரும்பாலும் கட்டுமானச் சேதங்கள், சீரமைப்பு, பராமரிப்புப் பணிகளுக்காகவே இருக்கும். இந்தச் செலவுகளுக்குக் கட்டுநர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், அது வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அத்துடன், இந்தப் பராமரிப்புத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கினால், அது கட்டுமானத் திட்டத்தின் தரத்தையும் உயர்த்தும். இதனால், சந்தையில் முதலீட்டாளர்கள் பெருகுவதால் இப்போதைய சரிவில் இருந்து ரியல் எஸ்டேட் துறை சீக்கிரம் மீண்டுவரும்” என்கிறார் காஸா கிராண்டேவின் நிர்வாக இயக்குநர் அருண்குமார்.
இந்த வீடுகளுக்கான பராமரிப்புத் திட்டம் வீட்டை வாங்குபவர்கள், விற்பவர்கள் இருவருக்கும் சாதகமாக அமைந்திருக்கிறது. “இதனால் வீடு வாங்குபவர்கள் கவலையின்றி இருக்கலாம். ஏனென்றால், இந்தப் பராமரிப்புக் காலத்துக்குள் வீட்டில் கட்டுமானப் பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால், அதைக் கட்டுநர்களே சரிசெய்துகொடுத்துவிடுவார்கள். விற்பவர்களைப் பொறுத்தவரை, இந்த வீட்டுப் பராமரிப்பு விற்பனையை அதிகரிப்பதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும்” என்று சொல்கிறார் நைட் பிரான்க்(இந்தியா)வின் சென்னை இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன்.
நுகர்வோரைத் திருப்திபடுத்துவதில், கட்டுமானத் தரம் முக்கியப் பங்குவகிப்பதைச் சுட்டிக்காட்டும் அக்ஷயா நிறுவனத்தின் தலைவர் டி. சிட்டிபாபு, “பத்து ஆண்டுகளுக்குப் பராமரிப்புச் சேவைகளை வீடுகளை விற்ற பிறகு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் கட்டிடப் பராமரிப்பு, சீரமைப்புப் பணிகள், சுவர்ப் பராமரிப்பு, உட்புற அலங்காரம், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவையும் அடங்கும்” என்கிறார்.
“இன்றைய நுகர்வோர்கள் எல்லாத் தகவல்களையும் அறிந்துவைத்திருக்கிறார்கள். அவர்கள் வீடு வாங்கிய பிறகும் சேவைகளை வழங்கும் தரமான கட்டுமானத் திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். இதனால் நம்பகத்தன்மையை உருவாக்க முடிகிறது” என்கிறார் அதிக்ரம்யா பில்டர்ஸ் பங்குதாரர் சுரேஷ் ஜெயின்.
இந்த வீட்டுப் பராமரிப்பு டிரண்டு, வெளிநாடுகளில் வளர்ச்சியடைந்த சந்தைகளில் பிரபலமாக இருக்கிறது. இதற்காகவே தனியாக நிறுவனங்கள் செயல்படுகின்றன. “இந்த நிறுவனங்கள் வீட்டுக்கான பராமரிப்பைப் பிரத்யேகமான சேவைகள் மூலம் வழங்குகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அதற்கான தொகையை வீட்டு முதலாளிகளிடம் இந்நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. இந்தச் சேவை கட்டுநர்கள் வீட்டை வாங்கியவரிடம் ஒப்படைத்தவுடன் தொடங்குகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த வீட்டுப் பராமரிப்பு என்ற சொல், ரியல் எஸ்டேட் துறையை இப்போது புதிதாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதில் கூறப்பட்டுள்ள சேவைகள் எல்லாமே ஏற்கெனவே கட்டுநர்களால் வழங்கப்பட்டவைதான்” என்கிறார் ஜேஎல்எல் தேசிய இயக்குநர் ஏ. சங்கர்.