ஆரஞ்சு பழ செடிக்கு சிறுநீரை ஊற்றுங்கள். மத்திய அமைச்சர் அறிவுரை

nitinமுன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தனது சிறுநீரை குடித்து ஆரோக்கியமாக இருப்பதாக கூறி கடந்த சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதைபோலவே தற்போதைய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிறுநீர் ஊற்றி வளர்க்கப்படும் செடிகள் மிகவும் நன்றாக செழித்து வளரும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளதால் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்த சில நாட்களாகவே மத்திய அமைச்சர்கள் ஒருவர் மாறி ஒருவர் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் வாங்கி கட்டிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் அமைச்சர் நிதின் கட்காரி.

புதுடில்லியில் வறட்சியை சமாளிக்கும் விதமாக நீர்ப்பாசன முறைகள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்காரி, “டில்லியில் மத்திய அரசு எனக்கு ஒதுக்கியிருக்கும் வீட்டில் உள்ள ஒருசில செடிகளுக்கு என்னுடைய சிறுநீரை சேமித்து, அது 50 லிட்டர் ஆனவுடன் அதில் தண்ணீர் கலந்து ஊற்றினேன். அந்த செடிகள் மற்ற செடிகளை விட நன்றாக செழிப்பாக வளர்ந்ததை கண்டு அதிசயித்தேன்.

நமது சிறுநீரில் யூரியாவும், நைட்ரஜனும், அதிகமாக உள்ளதால் இதை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக ஆரஞ்சு பழ செடிக்கு சிறுநீரை ஊற்றி வளர்த்தால் ஆரஞ்சு பழங்கள் நல்ல சத்துள்ளதாக இருக்கும். இதை நமது சொந்த அனுபவத்தினால்தான் உணர முடியும்” என்று கூறினார்.

நிதின்கட்காரியின் இந்த பேச்சுக்கு மூக வலைதளங்களான  ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply