மனிதர்களின் இடப்பெயர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது எலும்பும் மூட்டுக்களும்தான். உடலில் ஏராளமான அசையும் மூட்டுக்கள் இருந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது கால் மூட்டுக்கள்தான். குறிப்பாக பெண்கள்தான் மூட்டு வலியால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நடந்தால் கால் வலி, படியேறினால் மூட்டு வலி என வலி மாத்திரைகளை, வலி நிவாரண ஜெல்களை, மருத்துவர் ஆலோசனையின்றி தினமும் எடுத்துக்கொள்கிறார்கள். இவை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தரும். மருத்துவரின் ஆலோசனைப் பெற்று நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், மூட்டு வலியை எளிதாகக் குணப்படுத்த முடியும்.
மூட்டு வலி ஏன் வருகிறது?
மூட்டு வலி வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், வைட்டமின் டி, உடற்பயிற்சி இன்மையுமே மிக முக்கியமான காரணங்கள். நமது மூட்டு இணைப்புகளில் ‘ஹயலின் காட்ரிலேஜ்’ என்ற வழவழப்பான பொருள் எலும்புகளின் மேல் இருக்கும். முட்டி மடக்க, நடக்க, ஓட என எந்தவொரு செயல்பாட்டுக்கும் இந்த காட்ரிலேஜ் மிக முக்கியம். காட்ரிலேஜ் பாதிக்கப்படுவதாலும், தசைகள் வலுவிழக்கும்போதும் மூட்டு வலி வரும். மூட்டு வலியை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் (Osteo arthritis) மற்றொன்று ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid arthritis).
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்
(Osteo Arthritis):
மூட்டு வலி வந்தவர்களில் 95 சதவிகிதத்தினருக்கு வருவது இந்த வகை மூட்டு வலிதான். சாதாரணமாக இருக்கும்போது இயல்பாக, மூட்டு வலிக்காது. ஏதாவது ஒரு வேலை செய்தால் மூட்டு வலிக்கும். மசாஜ் செய்தால், நன்றாக இருப்பதுபோல தோன்றும். ஒரே நாளில் இந்த வலி வந்துவிடாது. மெள்ள மெள்ள ஹயலின் காட்ரிலேஜ் தேய்ந்துதான் மூட்டு வலி வரும். மூட்டு வலியை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம்.
எக்ஸ்ரே மூலம் வலி இருப்பவர்களுக்கு ஹயலின் காட்ரிலேஜ் நிலை மற்றும் மூட்டு எலும்பு நிலையைக் கண்டறியலாம். மூட்டு வலியில் முதல் இரண்டு நிலைகளில் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி, முறையான பிசியோதெரப்பி, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தருவதன் மூலமே குணப்படுத்திவிட முடியும். மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு எலும்புகளைச் சீரமைக்கும் ஆஸ்டியோடமி (osteotamy) எனும் அறுவைசிகிச்சை அல்லது துளை ஏற்படுத்தி செய்யப்படும் ஆர்த்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை தேவைப்படும். நான்காம் நிலையில் இருப்பவர்களுக்கு, மூட்டு மாற்று அறுவைசிகிச்சைதான் தீர்வு.
ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்
(Rheumatoid Arthritis):
நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களே (ஆட்டோ இம்யூன்) மூட்டைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பை ‘ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்’ என்கிறோம். இவர்களுக்கு உடலில் எங்கெல்லாம் மூட்டுக்கள் இணைகின்றனவோ, அங்கெல்லாம் பிரச்னை இருக்கும். குறிப்பாக கை, கால் விரல்களில் மிக அதிக வலி இருக்கும். சில சமயங்களில் வீக்கம் ஏற்படும். உடல் எடை குறையும்; அடிக்கடி காய்ச்சல் வரும். காலை நேரத்தில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவே முடியாத நிலை இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மூட்டு வலி பயங்கரமாக இருக்கும். இவர்களுக்கு காட்ரிலேஜ் பகுதியில் இருக்கும் `சயநோவியம்’ (synoviam) வீங்கிப்போய், மூட்டை அரித்துவிடும். நடக்கவே மிகவும் சிரமமாக இருக்கும்.
இந்த வகை மூட்டு வலிக்கு ‘சயனொவிக்டமி’ எனப்படும் துளை போட்டுச் செய்யப்படும் அறுவைசிகிச்சை அல்லது மூட்டு மாற்று அறுவைசிகிச்சைதான் பலன் அளிக்கும். `கிரையோதெரப்பி’ எனப்படும் சிகிச்சையில் மைனஸ் 110 டிகிரிக்கு கீழ், குளிர் இருக்கும் ஓர் அறையில் தினமும் மூன்று நிமிடங்கள் என தொடர்ந்து ஒரு மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டால், நல்ல பலன் இருக்கும்.
வரும் முன் காக்க வழி:
வைட்டமின் டி அவசியம்:
எலும்பு கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறையும்போது, எலும்புகள் பலவீனம் அடைந்து, படிப்படியாக அதன் உறுதித்தன்மையை இழக்கின்றன. வீட்டுக்குள்ளேயும், குளிர்சாதன வசதி நிறைந்த அலுவலகத்திலும் மட்டுமே இருப்பவர்களுக்கு சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி சத்து கிடைப்பது இல்லை. இந்தக் குறைபாட்டைத் தவிர்க்க, காலை 7.30 முதல் 9 வரை மற்றும் மாலை 4.30 முதல் 5.30 வரை நடைப்பயிற்சி செய்வதோ, விளையாடுவதோ நல்லது. கடுமையான வெயில் இருக்கும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள், சன்ஸ்க்ரீன் தடவுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
கால்சியம் அவசியம்:
எலும்புகள் சீராக வளர கால்சியம் சத்து அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். பாலில் கால்சியம் சத்து அதிக அளவில் இருந்தாலும், அதில் உள்ள கேஸின் என்ற புரதம் உடலுக்கு பல்வேறு தீய விளைவுகளை ஏற்படுத்தும். பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று வருடங்களில் பாலை செரிக்கத் தேவையான என்சைம்கள் உடலில் உற்பத்தியாகும் என்பதால், செரிமானத்தில் பிரச்னை இருக்காது. ஆனால், வளர ஆரம்பிக்கும்போது பாலை செரிக்கத் தேவையான என்சைம்கள் உடலில் இருக்காது. மேலும் வைட்டமின் டி சத்து கிடைக்கப்பெறாதவர்களுக்கு வெறும் கால்சியம் மட்டும் உடலில் கிடைத்தால், கால்சியம் எலும்பில் சேராமல் கழிவு வழியாக வெளியே வந்துவிடும். எனவே, கால்சியம் சத்துக்காக பால் பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாலுக்குப் பதிலாக எள், கேழ்வரகை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், அன்றாட உணவிலேயே, உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் இருக்கிறது. கீரை, பழங்கள், காய்கறிகள், சிறுதானிய உணவுகளில் இருந்து கிடைக்கும் கால்சியமே போதுமானது. மூட்டு வலியைத் தடுக்க கால்சியம் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதோ, கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடுவதோ கூடாது. கால்சியம் சத்துக் குறைபாடு இருப்பது உறுதியாக அறியப்பட்டால் மட்டும், கால்சியம் நிறைந்த உணவுகள், கால்சியம் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக்கொள்ளலாம்.
உடற்பயிற்சி:
75 சதவிகிதம் மூட்டு வலி வருவதற்கு உடற்பயிற்சி இன்மையே காரணம். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்பவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. கிராமங்களைவிட நகர்ப்புற மக்களுக்குத்தான் மூட்டு வலிப் பிரச்னை அதிக அளவில் இருக்கிறது. காலை சூரிய ஒளியில் நடைப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் முதலான யோகப் பயிற்சிகள் செய்வது உடலுக்கு நல்ல பலன் தரும். எலும்புகள் சீராகவும், உறுதியாகவும் வளரும். தினமும் அரை மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, மூட்டு வலியில் இருந்து காக்கும். மூட்டு வலி வந்தவர்கள் நடக்க முடியாதபட்சத்தில், நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் போன்றவை செய்யலாம்.
சரிவிகித உணவு:
கால்சியம் சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து என ஏதாவதொரு சத்து இருக்கும் உணவு வகையை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவது நல்லதல்ல. எந்த ஓர் உணவையும் ஒதுக்காமல் ‘சரிவிகித உணவு’ சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
வேண்டாம் வலி மாத்திரைகள்:
அடிக்கடி மூட்டு வலி பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மருத்துவர் பரிந்துரையின்றி, மருந்துக் கடைக்குச் சென்று வலி நிவாரணி மாத்திரைகளை சுயமாக வாங்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கோளாறு பிரச்னை வந்துவிடும். எனவே மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மருந்து மாத்திரை தேவை இல்லை:
பரத் ஷங்கர்
உடல் ஒருங்கிணைவு தெரப்பி நிபுணர்
“முதுகு வலி, மூட்டு வலி முதலான பல வலிகளுக்கு அடிப்படைக் காரணம், இடுப்புப் பகுதி சரியான கோணத்தில் இல்லாமல் இருப்பதுதான். மூட்டு வலிக்கான பிரச்னை பெரும்பாலும் இடுப்புப் பகுதியில்தான் இருக்கும். இடுப்புப் பகுதி சற்றே வளைந்து இருந்தாலும் ஏதாவதொரு கால் மூட்டு அதிக எடையைத் தாங்க வேண்டியது இருக்கும். அதிக எடை தாங்கும் மூட்டு சில நாட்களில் வலுவிழக்க ஆரம்பித்து, மூட்டு வலி வரும். இடுப்பு எலும்பு வளைந்து இருப்பதை சில வகைப் பயிற்சிகள் மூலம் சரிசெய்ய முடியும். இடுப்புப் பகுதியை சரிசெய்தால் தானாகவே மூட்டுப் பிரச்னை சரியாகிவிடும். இந்தப் பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எந்தப் பிரச்னையால் மூட்டு வலி ஏற்படுகிறது என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து, ஒருவருடைய எடை மற்றும் அவருடைய பிரச்னைக்கேற்ப பயிற்சிகள் கற்றுத்தரப்படும். மூட்டு வலி இருப்பவர்கள் தினமும் ஒரு மணி நேரம் என தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சிகளை செய்துவந்தாலே மூட்டு வலியிலிருந்து முழுமையாக விடுபட முடியும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது எந்தவித மாத்திரை, மருந்துகளையும் எடுக்கத் தேவை இல்லை. சரிவிகித உணவு மட்டும் அவசியம். மூட்டு வலி இருப்பவர்களால் நடக்கவே முடியாத நிலையில் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் கடினம். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, உடல் ஒருங்கிணைவு தெரப்பி (posture alignment therapy) கைகொடுக்கும்.