மெனோபாஸ் என்பது இயற்கையான உடலியல் மாற்றம். இது பெண்களுக்கு 50 முதல் 55 வயதில் ஏற்படலாம். இப்போது மெனோபாஸ் 40 வயது முதல் 45 வயதினருக்கும் ஏற்படுவது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை மெனோபாஸ் (அதாவது மாதவிடாய் நிற்பது) என்பது ஓர் இயற்கைச் சுழற்சி. இந்தக் காலத்தில் உடல்நலத்தைக் கூடுதலாகப் பேணுவதற்கு வாய்ப்பாக இது அமையும் என்கிறது. இயற்கையான இந்த நிகழ்வை, சில அறிகுறிகள் மூலம் மிகச் சுலபமாகச் சமாளிக்க முடியும் என்கிறது ஆயுர்வேதம்.
வளத்துக்கு அடித்தளம்
மெனோபாஸ் என்பது ஆயுர்வேதத்தில் ரஜோனிவிருத்தி (மாதவிடாய் நிற்பது) எனப்படுகிறது. இது உயிரியல் ரீதியாக இயல்பாக, முதுமையின் அறிகுறியாகவும் பிள்ளைப்பேறு குறைவதால் பெண்களுக்கு ஏற்படும் மாற்றம். மெனோபாஸ் என்பது இயற்கையின் அறிவிப்பு. இந்தக் காலகட்டத்தில் பெண்கள் உடல் மீது கூடுதல் கவனம் செலுத்தி, பின்னாளில் நலமாக வாழ அடித்தளம் அமைப்பதாக இருக்கிறது.
பெண்களின் உடலியல் செயல்பாடுகளை மூன்று பருவங்களாகப் பிரிக்கலாம். 1. குழந்தைப் பருவம், 2. நடு வயது – இளம் பருவம், 3. முதுமைப் பருவம். ஆயுர்வேதப் புரிதல்படி குழந்தைப் பருவத்தில் கபம் அதிகமாக ஏற்படும். நடு வயதுப் பருவத்தில் பித்தம் அதிகரிக்கும். முதுமைக் காலத்தில் வாயு எனப்படும் வாதம் ஏற்படும். மாதவிடாய் நிற்பது என்பது இளம் பருவநிலை மாறி முதுமைக்குச் செல்வதைக் குறிக்கிறது, அதாவது பித்த நிலையிலிருந்து வாத நிலைக்கு மாறுவதாகும்.
விளைவுகள்
பெரும்பாலான அறிகுறிகள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் கலந்ததால் ஏற்படும் தடுமாற்றச் சூழலாக இருக்கும். இதனால் பெண்களின் உடலியலில் (பிரகிருதி) அதிக மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் உடல் ஹார்மோன்கள் பித்தம், கபம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுவதால், இந்தச் சூழலில் பெண்கள் உடல் அதிக வெப்பமாவதை உணர்வார்கள். உடல் எடையும் அதிகரிக்கலாம். நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்றவை வாதத்தின் நிலை தடுமாற்றத்தால் தோன்றுவதாகும்.
மெனோபாஸ் அறிகுறிகள்
ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொரு பெண்ணுக்கும் மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றும், அதேநேரம் ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு வகையில் இருக்கும். இது பெண்களின் உடல் வாகுக்கு ஏற்றவாறு, உடலில் உள்ள தோஷங்களுக்கு ஏற்ப அமையும். பொதுவாக உடல் அதிக வெப்பமடைவது, இரவில் அதிகம் வியர்ப்பது, அதிக உதிரப் போக்கு, செயல்பாடுகளில் தடுமாற்றம், பிறப்புறுப்பில் வறட்டுத்தன்மை ஏற்படுவது, தூக்கமின்மை, எரிச்சல், உளைச்சல், எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி, இதயப் படபடப்பு, சோர்வு, மலச்சிக்கல், சிலருக்குச் சிறுநீர் போக்கில் முறையற்ற தன்மை ஆகியவை உண்டாகலாம்.
அசவுகரிய காரணங்கள்
மெனோபாஸ் காலம் என்பது பித்தக் காலச் சுழற்சியிலிருந்து வாதக் காலத்துக்கு மாறுவதாகும். இந்தச் சுழற்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பெண்ணின் உடலில் பித்தமும் வாயுவும் இருந்தால், மெனோபாஸ் சமயத்தில் அவை அதிகரிக்கும். ஹார்மோன், இயற்கையான உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதால் இப்படி நிகழ்கிறது.
மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் தடுமாற்றம் செரிமானத்தைப் பாதிக்கும். இதன் காரணமாக உடலில் ஊட்டச்சத்து சேர்வது தடைபடும். மேலும் இந்தச் செல்கள் உடலில் இருந்து கழிவுப் பொருள்களை வெளியேற்றுபவை. இவை அனைத்தும் மெனோபாஸ் சமயத்தில் பாதிப்புக்குள்ளாகும். மூன்றாவது முக்கியமான விஷயம் மூளையைத் தவறாக வழிநடத்துவது, கோபம், எரிச்சல் போன்றவற்றை அதிகரிக்கச் செய்வது போன்ற செயல்கள் தூண்டப்படும்.
சிகிச்சையின் அவசியம்
மெனோபாஸ் இயற்கையான உடலியல் மாற்றம்தான் என்றாலும், அது நிகழும்போது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், தொடர்ந்து தூக்கமின்மை, மூளைச் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படும். இவற்றுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின்னாளில் பல நோய்கள் உருவாகலாம். இத்தகைய அறிகுறிகள் உடல் தசைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், எலும்பு, தசை, கொழுப்பு, உடலுறுப்பு, தோல் மற்றும் ரத்தம் உறைவது உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பது ஆயுர்வேதப் புரிதல். ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக உடலில் கழிவுப் பொருள் தங்கினால், அது ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த நாளங்களை இப்படி விரிவடையச் செய்வதால் வெப்பம் உருவாகும். இதனால் தசையும் விரிவடையும்.
ஆயுர்வேதச் சிகிச்சை
மெனோபாஸ் சமயத்தில் ஆயுர்வேதச் சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பது, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகப்படுத்தி உடலே அதைக் குணப்படுத்தும் அளவுக்குத் தயார்படுத்துவதாகும். இதற்கு மூன்று வகையான அணுகுமுறைகள் அவசியம்: அவை உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் இயற்கை மருத்துவச் சிகிச்சை முறை. உடலில் உள்ள தோஷங்களைச் சமநிலைபடுத்துவது ஆயுர்வேதச் சிகிச்சை முறையில் உண்டு.
இதன் மூலம் மெனோபாஸ் காலச் சுழற்சிக்குப் பிறகு உடலில் உள்ள ஹார்மோன்கள் பழையபடி இயங்க வழிசெய்கிறது. இயற்கை மூலிகைகளான ஷதாவரி, அசோகா, லிகோரைஸ் ஆகியவற்றின் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தாவரங்களில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புக்கு உதவும் மருத்துவக் குணங்கள் உள்ளன.
கழிவு அகற்றச் சிகிச்சை
அத்துடன் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறை, அதிகப்படியான தெம்பை அளிப்பதுடன் பைதோஈஸ்ட்ரோஜென் சுரக்கவும் உதவுகிறது. வெளிப்புறச் சிகிச்சை முறையான எண்ணெய்க் குளியல் மூலம் உடலிலுள்ள கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஷிரோதரா (முன் நெற்றியில் எண்ணெய் தடவுதல்) மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் உடலின் செயல்பாடுகளைச் சுத்தமாக்குகின்றன. இது உடலுக்குச் சுகத்தை அதிகரிக்கிறது. செரிமானச் சக்தியையும் (அக்னி) அதிகரிக்கச் செய்கிறது. இவை அனைத்தும் மன அழுத்தம் மற்றும் எரிச்சலைப் போக்குகின்றன.
மருத்துவச் சிகிச்சை, ஆயுர்வேதச் சிகிச்சை முறையில் லோத்ரா, அசோகா, ஷதாவரி மற்றும் குமாரி ஆகிய இயற்கை மூலிகைகள் மேற்கண்ட உடற்செயல் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகின்றன. மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள, அஷ்வசனம் (சிறந்த ஆலோசனை) சிறந்த வழிகாட்டியாக உதவுகிறது.
உணவு
ஹார்மோன்களைச் சீராக வைத்திருக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். காய்கறிகள், பழங்கள், பால், நெய், சோயா பால், கீரை, கொண்டைக்கடலை உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம். பைதோஈஸ்ட்ரோஜென் சுரக்க இவை உதவும். சூடான உணவு, பானங்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது மற்றும் வெந்தயம் உள்ளிட்டவற்றை உணவில் அதிகம் சேர்ப்பது போன்றவையும் சிறந்தவையே. காபி குடிப்பதைத் தவிர்ப்பது, சர்க்கரை, குளிர்பானங்கள், சாலட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது ஆயுர்வேதம் தரும் பரிந்துரை.