மழைக் காலத்தில்தான் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கும். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் நம்மை தாக்குகிறது. அதுமட்டுமின்றி வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் கழிவுநீர் போல் மாறி விடுகிறது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த தண்ணீரில் நடந்து செல்கிறோம். இதனால் வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது. சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வயிற்றுப்போக்கு, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும். மழைநீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள் மூலம் உயிருக்கே உலை வைக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
மழைக்காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இந்த மலேரியா காய்ச்சலுக்கு முக்கிய காரணம் கொசு. அனோபிலஸ் வகை பெண் கொசு மலேரியா நோய்க்கு காரணமான பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன.
நோய்த்தாக்கம்: நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.
மலேரியா ஒட்டுண்ணிகள் : இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன.
பாதிப்புகள்: கிட்டத்தட்ட 105 நாடுகளில் 330 கோடி பேர் மலேரியாவின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் மலேரியாவால் மரணம் அடைகிறார்கள்.
காரணங்கள்: குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர், கழிவுநீர் போன்ற இடங்களில் வரும் கொசுக்களே மலேரியா காய்ச்சலை உருவாக்குகின்றன. வீடுகளில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
மலேரியாவின் அறிகுறிகள்: காய்ச்சல், கடும் குளிர், வியர்த்துக் கொட்டுதல், தசைவலி, தலைவலி, சில நேரங்களில் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும். மலேரியா நோயாளிகளுக்கு சிறுநீரகம் செயலிழத்தல், வலிப்பு, உணர்ச்சி இழந்த ஆழ்ந்த உறக்கநிலை(கோமா) ஏற்படக்கூடும்.
பி. விவாக்ஸ், பி. ஒவேல் நோய்க் கிருமிகள் ஈரலில் (Liver) பல மாதங்கள், ஆண்டுகள் செயலற்று இருக்க வல்லவை. இதனால் பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படக்கூடும். கொசு கடிப்புக்கும், மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே பொதுவாக 7முதல் 21 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால் முழுமையான, தேவையான அளவு மலேரியா தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாதவர்களிடம் இந்த இடைவெளி இன்னும் சற்று அதிகமாக இருக்கும்.
மலேரியாவின் தடுப்பு முறைகள்:
கொசுக்களை தடுக்கும் ஏற்பாடுகளையும், மலேரியாவை தடுக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வதின் மூலம் மலேரியாவிலிருந்து தங்களை காப்பற்றிக் கொள்ள இயலும்.
கொசுக்கடியைத் தவிர்த்தல்:
* மாலை, இரவு நேரங்களில் அனாபிளஸ் பெண் கொசுக்களின் கடிக்கு உட்படாத முயற்சிகளும், செயல்பாடுகளும் மலேரியா வருவதைத் தடுக்க சிறந்த வழிகளாகும்.
* இரவு நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் நீண்ட, கையுள்ள ஆடைகளையும், பெரிய முழுகாற் சட்டையையும் அணிதல் வேண்டும்.
வெளியே தென்படும் தோலின் மீது கொசுக்களை விரட்டியடிக்கவல்ல மருந்துகளை தடவிக் கொள்ளலாம்.
* படுக்கையைச் சுற்றிலும் கொசு வலையை பயன்படுத்த வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக பெர்மித்ரின் எனும் பூச்சிக்கொல்லி மருந்தை கொசு வலையின்மீது பூசலாம்.
* பெர்மித்ரின் அல்லது அதுபோன்ற பூச்சிகொல்லி மருந்தை உங்கள் வீட்டின் பெரிய அறை அல்லது படுக்கும் அறையில் தெளிக்கலாம்.
* செம்மையான நோய் தடுப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து அளவையையும், உண்ண வேண்டிய காலத்தையும் கண்டிப்பாக பின்பற்றுவது மிகவும் இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு வாரமும் அதே குறிப்பிட்ட கிழமைகளில் அல்லது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
சிக்குன் குனியா:
கொசுவினால் பரவக்கூடிய நோய்களில் சிக்குன் குனியாவும் ஒன்று. இது ஒரு வைரஸ் நோயாகும். ஈடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) என்ற கொசுவால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த கிருமிகள் மிக அதிக அளவில் பரவுகின்றன. கொசுக்களால் மட்டுமே மனிதர்களிடையே பரவுகிறது.
வைரஸ் தொற்று ஏற்பட்டு 2 முதல் 12 நாட்களில் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சில சமயங்களில் வைரஸ் தொற்று உடல்நலக்குறைவாக மாறாமல் அமைதியாக உடலில் தங்கியிருப்பதும் உண்டு. இவ்வாறு ஏன் நிகழ்கிறது என்பது இதுவரை அறியப்படவில்லை.
சிக்குன்குனியா காய்ச்சலானது, பாதிக்கப்பட்டவரின் மூட்டுகளைத் தாக்கி முடக்குமே தவிர இறப்பை ஏற்படுத்தாது.
அறிகுறிகள்:
காய்ச்சல், மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம், பிடிப்பு, தசைகளில் வலி, தலைவலி, பலவீனம், குமட்டல், வாந்தி, அரிப்பு ஆகியவை சிக்குன்குனியா நோயின் அறிகுறிகளாக உள்ளன. இந்த காய்ச்சலால் முதுகு வலி, கறுப்பு நிறவாந்தி, மூக்கில் ரத்தம் கசிதல், மூட்டு வலி போன்றவை ஏற்படும். காய்ச்சல் மூன்று நாட்களிலேயே குணமாகி விடும். ஆனால் மூட்டு வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு ஒன்று முதல் மூன்று வாரங்களுக்கோ அல்லது பல மாதங்களுக்கோ நீடிக்கலாம். கைவிரல் மூட்டுக்கள். மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால். கால்விரல் மூட்டுக்களைத்தான் இந்த காய்ச்சல் மிக அதிகமாகத் தாக்கும்.
சிகிச்சை:
நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தில் சிக்குன் குனியாவுக்கென குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. சிக்குன்குனியா வைரஸ் எதிர்ப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆன்டிபயாடிக் மருந்துகள், பெயின் கில்லர்கள் தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. கை கால்களுக்கு மிதமான பயிற்சி கொடுப்பது நல்லது.