விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார். முரளிதரராவ்
சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக ‘திருப்புமுனை’ மாநாட்டில் விஜயகாந்த் கிங்கா? அல்லது கிங் மேக்கரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இந்த மாநாட்டிற்கு பின்னர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அக்கட்சியின் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.
இதனால் திமுகவும், மக்கள் நலக்கூட்டணியும் அதிர்ச்சி அடைந்துள்ளன. திமுக கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளாராக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பே இல்லை என்பதால் திமுக கூட்டணியில் அக்கட்சி இணையாது என்றே கூறப்படுகிறது.
மேலும் மக்கள் நலக்கூட்டணியில் வைகோ, திருமாவளவன் ஆகியோர் முதல்வர் வேட்பாளர் கனவில் இருப்பதால் அந்த கூட்டணியும் தேமுதிகவின் இந்த அறிவிப்பு குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பாஜக மட்டும் தேமுதிகவின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான பி.முரளிதர ராவ் குறிப்பிடும்போது, ‘தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் தயக்கம் இல்லை தங்களுக்கு தயக்கம் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நிருபர்களிடம் முரளிதர ராவ் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. வாக்குச்சாவடி அளவில் குழு அமைக்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளது. சட்டப்பேரவை தொகுதி வாரியாக செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம்.
இந்தத் தேர்தலில் வலிமையான கூட்டணியில் பாஜக இடம்பெறும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில், ‘கிங்’காக இருக்க விரும்புவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் விரும்புவதில் தவறு எதுவும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என பாஜக நினைக்கவில்லை. விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்று கூறியுள்ளார்