கொடநாடு எஸ்டேட்டை என்னிடம் பயமுறுத்தி பெற்றுவிட்டார்கள். முன்னாள் உரிமையாளர் திடுக் தகவல்
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் தன்னிடம் இருந்து கொடநாடு எஸ்டேட்டை மிரட்டி வாங்கிவிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
1975ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த பீட்டர் கார்ல் எட்வர்ட் கிரைக் என்பவர் கொட நாடு எஸ்டேட்டை வாங்கி பின்னர் அதில் 1990ஆம் ஆண்டு கொடநாடு டீ எஸ்டேட் பிரைவை லிமிடெட் என்ற கம்பெனியை தோற்றுவித்தார். ஆனால் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆன பின்னர் அவருடைய தோழி சசிகலா அவர்களுடைய ஆட்கள், ‘முதல்வர் இந்த கொடநாடு எஸ்டேட்டை வாங்க விரும்புவதாகவும், எனவே அதற்கு சம்மதிக்குமாறும் வற்புறுத்தியதாக அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். பீட்டர் கார்ல் இதற்கு மறுப்பு தெரிவித்ததும், உடனடியாக 150 கார்களில் அடியாட்கள் அவருடைய வீட்டின் முன் குவிந்து பயமுறுத்தியதாகவும், இதுகுறித்து அவருக்கு நண்பருக்கு நெருக்கமான அப்போதைய கவர்னர் சென்னாரெட்டியிடம் புகார் அளித்ததாகவும் பீட்டர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனாலும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி 906 ஏக்கர் கொட நாடு எஸ்டேட்டை ரூ.9.6 கோடிக்கு விற்கும்படி தான் வற்புறுத்தப்பட்டதாகவும் பீட்டர் கார்ல் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா உயிருடன் இல்லாத நிலையில், சசிகலாவும் சிறையில் உள்ள நிலையில் தன்னிடம் இருந்து மிரட்டி எழுதி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை மீண்டும் திரும்ப பெற சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அந்த பேட்டியில் பீட்டர் கார்ல் கூறியுள்ளார்.