ஜனநாயகத்தின் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்ட முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஜனநாயகத்தின் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்ட முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
supremecourt
ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம் அமளி ஏற்பட்டு மக்களின் வரிப்பணம் வீணாகின்றது என்றும், நாடாளுமன்றத்தை எப்படி நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளை வகுத்து உத்தரவிட வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், நாடாளுமன்றத்திற்கு கோர்ட் அறிவுரை வழங்க முடியாது என்றும் ஜனநாயகத்தில் விதிக்கப்பட்டுள்ள ‘லட்சுமணன் கோட்டை’ தாண்ட முடியாது’ என்றும் அதிரடியாக கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூச்சல் குழப்பத்திற்கு தீர்வு காண, தேசிய மாண்புகளை மீட்டெடுக்கும் அமைப்பு  பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘நாடாளுமன்றத்தில் அமளி, வெளிநடப்பு, கூச்சல் குழப்பம் ஆகியவற்றால் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது. கடந்த ஆறு கூட்டத் தொடர்களில் 2,162 மணி நேரம் கூச்சல், குழப்பம், அமளியால் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தை எப்படி நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளை வகுத்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அமிதவா ராய் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனு குறித்து கூறியபோது, ‘நாடாளுமன்றத்தை நடத்துவது எப்படி என்பது சபாநாயகருக்கு தெரியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனுபவம் மிக்கவர்கள்; அறிவுமிக்கவர்கள். அவர்களது பொறுப்பு என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.

ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தை எப்படி நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுரை கூற முடியாது. அதைச் செய்யவும் கூடாது. அவர்களை கண்காணிப்பது சுப்ரீம் கோர்ட்டின் வேலை அல்ல. அப்படி செய்தால் அது அதிகார எல்லை மீறிய செயலாக அமையும். சுப்ரீம் கோர்ட்டுக்கு இருக்கும் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டக் கூடாது’ என்று கூறிய நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply