ஜெ. சிகிச்சை புகைப்படங்களை வெளியிடட்டும். புகழேந்திக்கு ஓபிஎஸ் பதிலடி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ‘விரைவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட உள்ளதாகவும், அந்த புகைப்படங்கள் வெளிவந்த பின்னர் ஓபிஎஸ் அணியினர்களின் முகத்திரை கிழியும் என்றும் அ.தி.மு.க (அம்மா) அணியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நாங்கள் யாரும் அவரைப் பார்க்க முடியாத சூழல் இருந்தது. எனவே, புகழேந்தியின் பேச்சுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளை மட்டுமே நாங்கள் முழுவதும் நம்பினோம்’ என்று கூறினார்.
மேலும், அரசியல் காரணங்களுக்காக விதவிதமான கருத்துகளை ஸ்டாலின் கூறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஓ.பி.எஸ், தான் முதல்வராக இருந்த காலத்திலேயே ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.