எங்களை மீறி கத்தியை தமிழகத்தில் திரையிட யாராலும் முடியாது. விடுதலை சிறுத்தை

vineeth srinivasanவிஜய் நடிக்கும் கத்தி படத்தை திரையிட சீமான் போன்றவர்கள் எத்தனை பேர்கள்  ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

”கத்தி திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர் மீது எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனும் ‘லைக்கா புரொடஷன்ஸ்’ என்ற அவருடைய தயாரிப்பு நிறுவனமும்தான் எங்களுக்கு எதிரி. எங்களுக்கு மட்டுமல்ல அவர்கள் தமிழ் இனத்திற்கே எதிரி.

இந்த நிறுவனம், இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி அங்கிருந்த தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நேரடியான பினாமி நிறுவனம் ஆகும். லைக்கா டெல், லைக்கா ஃபிளை, லைக்கா மணி, லைக்கா டிராவல்ஸ் என்று பல வியாபாரங்களில் இதுவரை ஒன்றாக செயல்பட்டு வந்த இவர்கள், இப்போது லைக்கா புரொடக்ஷன் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர். ராஜபக்ஷேவுக்கு எதிராக உலகத் தமிழர்களிடையே இருக்கும் மனநிலையை மாற்றுவதுதான் இவர்களின் சதித்திட்டம். எங்களை மீறி படத்தை தமிழ்நாட்டில் திரையிட முடியாது என ஆவேசமாக கூறியுள்ளார்.

ஆனால் இதுகுறித்து ”கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரராஜன் கூறுகையில் ”’கத்தி’ திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான படமும் அல்ல. தமிழர்களுக்கு எதிரானவர்கள் தயாரித்த படமும் அல்ல. சுபாஷ்கரன் என்ற ஈழத்தமிழருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம்.

1980-களில் இலங்கையில் இருந்து வெளியேறிய சுபாஷ்கரன் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் கௌரவமான அடையாளமாக லண்டனில் இருந்து வருகிறார். தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் ‘ஞானம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார். ராஜபக்ஷேவை அவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? அவருக்கு எப்படி பினாமியாக செயல்படுவார்?

இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்குக் காரணம், லைக்கா நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாகத் தொழில் நடத்தும் சில போட்டியாளர்கள் பரப்பிவிடும் பொய்யான குற்றச்சாட்டுகள்தான். அவர்கள்தான் வேண்டுமென்றே தொழில்போட்டி காரணமாக பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றனர். இதை வைத்து பணம் சாம்பாதிக்க நினைப்பவர்கள், எங்களைப் புரிந்துகொள்ளாதவர்களைப்போல் நடிக்கின்றனர். நிச்சயமாக தீபாவளிக்கு ‘கத்தி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும்” என்றார்.

Leave a Reply