10ஆம் வகுப்பில் 498, 12ஆம் வகுப்பில் 1,182. இது கொலையான காவலர் முனுசாமி மகளின் மார்க்
நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க முயன்று மரணம் அடைந்த காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு நேற்று முதல்வர் ஜெயலலிதா ரூ.1 கோடி நிதியுதவியும், முனுசாமியின் மகள் படிப்புச்செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முனுசாமியின் மகள் கண்ணீருடன் நன்றி தெரிவித்து உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கே.திப்பேப்பள்ளியில் வசிக்கும் காவலர் முனுசாமியின் மகள் ரக்ஷனா முதல்வரின் அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நான், 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்தேன். சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 1,182 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கட்-ஆப் 198.4 வைத்துள்ளேன். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதேபோல், என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று எனது அப்பா விரும்பினார்.
என் அப்பா உயிரிழந்துள்ள நிலையில், எனது படிப்பு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருந்தோம். இந்த நிலையில், எனது உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு நான் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சருக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்.
காவலர் முனுசாமி மனைவி முனிலட்சுமி கூறியபோது, ”எனது கணவர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்தது பற்றி தகவல் அறிந்து மிகவும் வருத்தமடைந்த முதலமைச்சர், எனது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கவும், எனது மகள் ரக்ஷனாவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். இதற்காக, முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வருக்கு நானும், எனது குடும்பமும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்” என்று கண்ணீருடன் கூறினார்.