சரத்குமாரின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை. வெற்றிக்கு பின்னர் நாசர் பேட்டி

சரத்குமாரின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை. வெற்றிக்கு பின்னர் நாசர் பேட்டி
pandavar
நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டு, 11.30 மணியளவில் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தமுள்ள 24 செயற்குழு உறுப்பினர்களில் 20 பேர் விஷால் அணியை சேர்ந்தவர்களும், 4 பேர் சரத்குமார் அணியை சேர்ந்தவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் கூறியதாவது:

நாசர்: சொல்லமுடியாத உணர்வில் இருக்கிறோம். யாரையும் தோற்கடிக்கும் நோக்கில் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. மாற்றத்துக்காகவே நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டோம். மூத்தவர்களின் வழிகாட்டுதலில் இளையோரின் சக்தியில் செயல்படுவோம். இந்த இளைஞர் சக்தி, தென்னிந்திய நடிகர் சங்கத்தை வெகு வேகமாக வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வோம்.

இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து இளைய தலைமுறையினருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் சரத்குமாரின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை. நடிகர் சங்கத்தில் எந்தவித பிளவும் கிடையாது. வெற்றிக்காக பாடுபட்ட விஷாலுக்கும் என் தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”

விஷால்: ”பாண்டவர் அணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. அனைவரும் வந்து வாக்களித்தது, ‘ஸ்டார் நைட்’ ஷோவைவிட சிறப்பாக இருந்தது.

மாற்றம் தேவை, சக நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த பயணம். எத்தனையோ மூத்த நடிகர்கள் தங்களது முதுமையை கூட பொருட்படுத்தாமல் வந்து வாக்களித்தனர். அவர்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லை. வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வீல் சேரில் கூட வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

கார்த்தி: அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி இந்த தேர்தலை நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் சங்கத்துக்கு மீண்டும் புத்துணர்வு ஏற்பட்டு உள்ளது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்கு அளித்த அனைவருக்கும் என் நன்றி.

இதில் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் செய்யப்போகிறோம். சங்க உறுப்பினர்களின் தகவல்கள், அவர்களின் தேவைகளை சேகரிப்பதே எங்களின் முதல் பணி”

Leave a Reply