மணமகன் மாயம் – மணப்பெண் புகார்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் உத்தமி. இவர், தன் மகள் சூர்யா பிரியா மற்றும் சகோதரர் தினேஷ்குமார் ஆகியோருடன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:-

என் மகள் சூர்யா பிரியாவுக்கும், சென்னை சி.ஐ.டி. நகரை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் சுந்தரேசனுக்கும் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. சுந்தரேசன், பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி, மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

இவருக்கு, ஏற்கனவே நீரஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, பெங்களூர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. முதலில் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறிய சுந்தரேசன் குடும்பத்தினர், பின்னர் 100 சவரன் நகை, மணமகனுக்கு தங்க செயின், பிரேஸ்லெட், ரூ.5 லட்சம் ரொக்கம், பெங்களூரில் வீடு ஆகியவை வரதட்சணையாக தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். முதலில் நாங்கள் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் இதற்கு சம்மதம் தெரிவித்தோம்.

நிச்சயதார்த்தம் நடந்த உடனே, ரூ.4.50 லட்சத்தை எங்களிடம் சுந்தரேசன் பெற்றோர் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில், பெங்களூர் நீதிமன்றத்தில் பிறப்பித்த விவாகரத்து தீர்ப்பின் நகலை சுந்தரேசன் பெற்றோரிடம் கேட்டோம். அவர்கள் தீர்ப்பின் முதல் பக்கத்தை மட்டும் காட்டிவிட்டு, அதை படிப்பதற்கு தர மறுத்துவிட்டார்கள்.

இதையடுத்து, பெங்களூர் நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பை படித்து பார்த்தபோது, சுந்தரேசனுக்கு சில பாதிப்புகள் உள்ளது என்று தெரியவந்தது. இதுகுறித்து குறித்து கேட்டபோது, அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. இந்த நிலையில், நவம்பர் 14 ஆம் தேதி வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.

நாங்கள் ஆயிரம் பத்திரிகைகளுக்கு மேல் அச்சிட்டு உறவினர்களுக்கு கொடுத்துவிட்டோம். ஆனால், சுந்தரேசன் தரப்பில் திருமணத்துக்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், அவர்களது வீடு பூட்டி கிடக்கிறது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதற்கிடையில், சுந்தரேசனின் உறவினர் எங்களுக்கு போன் செய்து, “போலீசில் புகார் எதுவும் செய்யக்கூடாது” என்று கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எனவே, எங்களிடம் வரதட்சணையாக வாங்கிய பணம், நிச்சயதார்த்தம் மற்றும் போக்குவரத்து செலவு என்று ரூ.9 லட்சத்தை சுந்தரேசன் குடும்பத்தினரிடம் இருந்து பெற்றுத்தரவேண்டும். மேலும், திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று கூறியுள்ளார்.

Leave a Reply