நற்செயல்களால் சமூகத்தில் நன்மதிப்பு பெறும், மேஷ ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் அனுகூலமாக உள்ளனர். சுக்கிரன், ராகு கூடுதல் நற்பலன் தருவர். வெகுநாள் இருந்த சிரமம் விலகும். புதிய முயற்சி முழு அளவில் வெற்றி பெறும். பெண்களால் நன்மை உண்டு. சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தாராள பணச் செலவில், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புத்திரர் அறிவு, ஆற்றலில் சிறந்து விளங்குவர். இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் செழித்து, பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து வெகுமதி பெறுவீர்கள். குடும்பப் பெண்கள், உறவினர்களை நன்கு உபசரிப்பீர்கள். மாணவர்கள், அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.
சந்திராஷ்டமம்: 12.2.15 காலை 7:08 மணி முதல் 14.2.15 மதியம் 1:28 மணி வரை.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதால் பொன், பொருள் சேரும்.
வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முழு கவனம் உள்ள, ரிஷப ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆதாய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய், கேது நற்பலன் வழங்குவர். எதிர்ப்புகளை சமாளித்து, உரிய நன்மை பெற வேண்டும் என்கிற மன உறுதியுடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்வதால் பயணம் எளிதாகும். பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க கூடாது. புத்திரரின் உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கச் சொல்லுங்கள். பணக்கடன் உருவாக்குகிற நெருக்கடியை, மாற்று உபாயத்தால் சரி செய்வது நல்லது. இல்லறத் துணையிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பணியாளர், அதிக பொறுப்புணர்வுடன் பணிபுரிவது நல்லது. பெண்கள், நகை பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். மாணவர்கள், பாதுகாப்பாற்ற இடங்களில் செல்லக்கூடாது.
சந்திராஷ்டமம்: 14.2.15 மதியம் 1:29 மணி முதல் அன்று நாள் முழுவதும்.
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதால், பணக் கடன் தீரும்.
அன்பு, பண்பு ஆகிய நற்குண நலன் பின்பற்றும், மிதுன ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, சனி, புதன், சுக்கிரன் அதிக நற்பலன் வழங்குவர். பேசும் வார்த்தையில் உண்மை மிகுந்திருக்கும். புதியவர்களின் அன்பு, நட்பு கிடைக்கும். பல நாள் நினைத்த திட்டம் ஒன்றை செயல்படுத்துவீர்கள். வெளியூர் பயணம் சில நன்மையைத் தரும். புத்திரர், உங்களின் ஆலோசனையை ஏற்று நடந்து கொள்வர். நிலுவைப் பணம் வசூலாகும். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத் துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரம் புதிய வளர்ச்சி இலக்கை அடையும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், வீட்டை அழகுபடுத்த கலை அம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவீர்கள். மாணவர்கள், நண்பர்களின் நன்மதிப்பு பெற்று, படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் முக்கிய செயல் எளிதாக நிறைவேறும்.
வாழ்வில் எளிமையை விரும்பி ஏற்கும் மனமுள்ள, கடக ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு ராகு, சுக்கிரன், சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். பணிகளை நிறைவேற்ற கூடுதல் முயற்சி, உழைப்பு தேவைப்படும். தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதால், வாழ்வின் முன்னேற்றத்திற்கான புதிய பாதை புலப்படும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். புத்திரரின் செயல் குறையை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. இல்லறத் துணை குடும்பச் சூழல் உணர்ந்து அன்பு, பரிவுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் அளவான பண வரவு கிடைக்கும். பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், குடும்பச் செலவில் சிக்கனம் கடைப்பிடிக்கவும், மாணவர்கள், படிப்பை தவிர, பிற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதால், குடும்பத்தில் ஒற்றுமை பலம் பெறும்.
கடமையில் கண்ணும் கருத்துமாக ஈடுபடும், சிம்ம ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள சூரியன், புதன், புத ஆதித்ய யோக பலன்களை முழு அளவில் தருவர். பழகுபவர்களிடம் நிதானித்து பேசுவது நட்பை பாதுகாக்க உதவும். குடும்பத் தேவைகளுக்கான பணச் செலவு அதிகரிக்கும். அறிவாற்றலினால் வாழ்வில் சில நன்மை பெறுவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரரின் செயல்களை கண்காணித்து வழி நடத்துவது அவசியம். உடல் நலம் ஆரோக்கியம் பெற, மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத் துணையின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாப்பில் அக்கறை கொள்ளவும். பெண்கள், சிரமங்களை சகிப்புத்தன்மையுடன் சரி செய்வீர்கள். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் மனமும், உடலும் வலிமை பெறும்.
வாழ்வியல் அனுபவங்களை பாடமாகக் கருதி செயல்படும், கன்னி ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, சனி, சந்திரன் நற்பலன் வழங்குவர். வார பிற்பகுதி நாட்களில் சூரியன், புதிய வாய்ப்புகளைத் தருவார். மன தைரியம் சிறப்பாக அமைந்து, வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர், சில விஷயங்களில் கருத்து வேறுபாடு கொள்வர். புத்திரரின் விருப்பம் நிறைவேற்றுவதில் தாமதம் உருவாகும். அறிமுகம் இல்லாதவரிடம் விவாதம் பேச வேண்டாம். உணவு உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றவும். இல்லறத் துணை வழி சார்ந்த உறவினர்களிடம் பெற்ற நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும். தொழிலில் சில மாற்றம் பின்பற்றுவது அவசியமாகும். பணியாளர், கூடுதல் வேலைவாய்ப்பை தவறாமல் ஏற்கவும். பெண்கள், குடும்பச் செலவில் சிக்கனம் பின்பற்றவும். மாணவர்கள், கூடுதல் பயிற்சியினால் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.
பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதால், தொழில் வளர்ச்சி சீராக அமைந்திடும்.
உண்மைக்கும், உழைப்புக்கும் அதிக மரியாதை தரும், துலாம் ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு புதன், சுக்கிரன், செவ்வாய், கேது நற்பலன் வழங்குவர். இஷ்ட தெய்வத்திடம் வெகுநாள் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சமூகப் பணியில் ஓரளவு ஈடுபடுவீர்கள். வாகனத்தில் பராமரிப்பு பணி பயணத்தை எளிதாக்கும். புத்திரர், புதிய நண்பர்களின் உதவியால், சில நன்மை பெறுவர். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் அளப்பரிய வளர்ச்சி பெறும். பணியாளர்கள் பணியை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். பெண்கள் புத்தாடை, அணிகலன்கள் வாங்க நல்யோகம் உண்டு. மாணவர்கள், நன்றாக படித்து பெற்றோரிடம் பரிசு பெறுவீர்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுவதால், குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.
தன் செயல்திறன் உணர்ந்து, பிறருக்கும் நல்வழி சொல்லும், விருச்சிக ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், சுக்கிரன், குரு, ராகு அதிக நற்பலன் வழங்குவர்.
மனதில் ஒரு முகத்தன்மையும், லட்சியத்தை நிறைவேற்றுகிற எண்ணமும் ஏற்படும். புதியவர்களின் உதவி கிடைக்கும். எதிர்ப்பு விலகி முன்னேற்ற பாதையில் நடைபோடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். புத்திரரின் கவனக் குறைவான செயல் பணச் செலவை ஏற்படுத்தும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இல்லறத் துணை குடும்ப நலன் பாதுகாத்திடுவார். தொழிலில் போட்டி குறைந்து வளர்ச்சியும், பண வரவும் அதிகரிக்கும். பணியாளர், சுறுசுறுப்பாக பணிபுரிந்து நற்பெயர் பெறுவீர்கள். பெண்கள், வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். மாணவர்கள், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால், வாழ்வில் துன்பம் விலகி நன்மை அதிகரிக்கும்.
உழைப்பின் நற்பலனை உயர்வாக கருதி வாழும், தனுசு ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், சந்திரன் மட்டுமே அனுகூல இடஅமர்வில் உள்ளனர். பெரிய திட்டங்களை நிறைவேற்ற, உரிய தருணம் வரும் வரை காத்திருப்பது நல்லது. சந்தோஷ நிகழ்வுகளை நினைப்பதால், மனதில் புத்துணர்வு ஏற்படும். அரசு தொடர்பான அனுகூலம் பெறுவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவருக்கு இடம் தர வேண்டாம். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து வழிநடத்துங்கள். எதிரி சொந்த சிரமம் காரணமாக விலகுவர். இல்லறத் துணை, உங்களின் நற்குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது. மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதால், தந்தை வழி உறவினர் சொந்தம் பாராட்டுவர்.
பணிகளை எளிய முறையில் நிறைவேற்றும், மகர ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், புதன், ராகு தவிர மற்ற கிரகங்கள் அனுகூல இடஅமர்வில் உள்ளனர். பேசும் வார்த்தையின் வசீகரம் புதியவர்களின் நட்பை பெற்றுத் தரும். பசு, பால் பாக்யயோகம் அமைந்து செல்வ வளம் அதிகரிக்கும். முருகப் பெருமானின் நல்லருள் பலமாக துணை நிற்கும். சிலர், புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்ப்பாளரிடம் சமயோசிதமாக விலகுவீர்கள். இல்லறத் துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் உதவுவார். தொழிலில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர் ஆர்வமுடன் பணி இலக்கு பூர்த்தி செய்வீர்கள். பெண்கள், குடும்பத்தின் எதிர்கால நலனுக்கு ஏற்ற பணி மேற்கொள்வீர்கள். மாணவர்கள், படிப்பில் சிறந்து பாராட்டு, வெகுமதி பெறுவீர்கள்.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபடுவதால், மகிழ்ச்சிகரமான வாழ்வு பெறுவீர்கள்.
தன்னைச் சார்ந்தவரின் வாழ்வு சிறக்க உதவுகின்ற, கும்ப ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன் மற்றும் சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவர். ஆடம்பர செயல்களை தவிர்ப்பது நல்லது. பிறருக்காக தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம். குடும்பத்தினர் ஒற்றுமை பேணுவதால் மட்டுமே நிம்மதி, மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நீண்ட துார வாகன பயணத்தில், பாதுகாப்பு தவறாமல் பின்பற்ற வேண்டும். புத்திரர் பிடிவாத குணத்தினால், ஒற்றுமை மனதுடன் செயல்படுவர். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத் துணை இன்ப, துன்பத்தில் சம பங்கு கொள்வார். தொழில் சார்ந்த இடையூறை தாமதமின்றி சரி செய்யவும். இயந்திர பிரிவு பணியாளர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரத்தில் நிதானித்து பேசவும். மாணவர்கள், அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 7.2.15 நள்ளிரவு 12:01 மணி முதல் 9.2.15 இரவு 10:43 மணி வரை.
பரிகாரம்: ராம பிரானை வழிபடுவதால், மனதில் ஒற்றுமை, அறிவாற்றல் வளரும்.
உயர்ந்த சிந்தனைகளை மனதில் நாளும் வளர்த்திடும் மீன ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு தேவ குரு வியாழன், அசுர குரு சுக்கிரன், ‘புத ஆதித்ய யோக’ பலன் தருகின்ற சூரியன், புதன் அனுகூலமாக உள்ளனர். அரசுத் துறை அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செயல்களை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். பண வரவு திருப்திகரமாகும். உடன் பிறந்தவர்களின் வாழ்வு சிறக்க உதவுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும்.
புத்திரர் நண்பருக்கு இணையாக கருத்துகளை சொல்வர். இல்லறத் துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழிக்க புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு உபரி பண வரவில் சேமிப்பு கூடும். பெண்கள், வேண்டுதல் நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், அறிவில் சிறந்து சாதனை நிகழ்த்துவர்.
சந்திராஷ்டமம்: 9.2.15 இரவு 10:44 மணி முதல் 12.2.15 காலை 7:07 மணி வரை.
பரிகாரம்: குபேரரை வழிபடுவதால், தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.