வார ராசிபலன் 21/12/14 முதல் 27/12/14

download

நிகழ்வுகளை பக்குவம் நிறைந்த மனதுடன் ஏற்கும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு கன்யா ராகு, தனுசு சுக்கிரன் நற்பலன் தருவர். உயர்ந்த செயல்களால் நல்ல புகழ் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியம் செயல்படுத்த அனுகூலம் உருவாகும். உடன் பிறந்தவரின் மன வருத்தம் தீர உதவுவீர்கள். பாதுகாப்பு குறைந்த இடங்களில், புத்திரரின் நடவடிக்கை அமையாமல் கவனித்துக் கொள்ளுங்கள். நிலுவைப் பணம் வசூலாகும். வழக்கில் வெற்றி உண்டு. இல்லறத் துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பை தவறாமல் ஏற்கவும். பெண்கள், குடும்பத்தில் மகிழ்ச்சிகர சூழல் உருவாக பணி செய்வர். மாணவர்கள், ஒருமுகத்தன்மையுடன் படிப்பதால், தேர்ச்சி விகிதம் சீராகும்.

சந்திராஷ்டமம்: 20.12.14 நள்ளிரவு 12:01 மணி முதல் 21.12.14 இரவு 9:33 மணி வரை.

பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவதுடன், இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தரலாம்.

லட்சியம் நிறைவேற்ற அயராமல் பணிபுரியும், ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு புதன், சுக்கிரன், கேது நற்பலன் தருவர். ஆன்மிக வழிபாடு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவு கூடும். புத்திரரின் அறிவார்ந்த செயல் நற்பெயரும், புகழும் பெற்றுத் தரும். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பிணி தொந்தரவு விலகி, உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத் துணையின் கவனக் குறைவான செயல் மனவருத்தம் தரும். தொழில், வியாபாரம் சிறப்பான இடம் பெற, சில மாறுதல் செய்வீர்கள். பணியாளர்கள், பணியிடத்தில் அதிகம் பேச வேண்டாம். பெண்கள், உத்வேக மனதுடன் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், தகுந்த பயிற்சியினால் எதிர்பார்த்த தேர்ச்சி விகிதம் பெறலாம்.

சந்திராஷ்டமம்: 21.12.14 இரவு 9:34 மணி முதல் 23.12.14 இரவு 1:22 மணி வரை.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதுடன், நல்லொழுக்கமுள்ள ஏழைக்கு உதவலாம்.

இரக்க மனதுடன், பிறருக்கு இயன்ற அளவில் உதவும், மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, சனி, சந்திரன் நற்பலன் தருவர். பேசுவதில் நிதானம், சமயோசிதம் நிறைந்திருக்கும். தாழ்வு மனப்பான்மை தவிர்ப்பதால், பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினரின் செயல் பற்றி விமர்சிக்க வேண்டாம். புத்திரரின் தேவையை பண வரவுக்கேற்ப நிறைவேற்றுவீர்கள். எதிரியால் உருவான சிரமம் அனுகூலம் தருவதாக மாறும். இல்லறத் துணையின் செயல் எதிர்மறையாக அமைந்து, மனதில் வருத்தம் தரும். தொழில், வியாபாரத்தில் சலுகைத் திட்டம் செயல்படுத்தி உற்பத்தி, விற்பனையின் அளவை சீராக்குங்கள். பணியாளர்கள், கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். குடும்ப பெண்கள், கணவரின் அனுமதியின்றி பணம் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 23.12.14 இரவு 1:32 மணி முதல். 25.12.14 இரவு 4:03 மணி வரை.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதுடன், ஏழைச் சிறுமியரின் படிப்புக்கு உதவலாம்.

செயல்களில் நீதி, நேர்மையை உறுதியுடன் பின்பற்றும், கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ராகு, சூரியன், புதனின் அமர்வு சிறப்பான வகையில் உள்ளது. நிதானித்து பேசி நற்பெயர் பெறுவீர்கள். தாமதமான பணி ஒன்று, புதிய முயற்சியால் முன்னேற்றப் பாதையில் செல்லும். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரரின் செயல் சிறக்க, தகுந்த ஆலோசனை சொல்வது நன்மை தரும். கெடுபிடி குணம் உள்ளவர்களிடம், அவசரத் தேவைக்கு பணக்கடன் பெற வேண்டாம். இல்லறத் துணையின் கருத்தில் உள்ள நியாயம் ஏற்பதால், குடும்ப ஒற்றுமை சீராகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டத் திட்டம் தவறாமல் பின்பற்றவும். குடும்பப் பெண்கள், கணவரின் சூழ்நிலை உணர்ந்து நடந்து கொள்ளவும். மாணவர்கள், நண்பர்களின் உதவியினால், படிப்பில் முன்னேற்றம் காணலாம்.

சந்திராஷ்டமம்: 25.12.14 அதிகாலை 4:04 மணி முதல் 27.12.14 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுவதுடன், மோதகம் படையல் செய்து, பிரசாதம் வழங்கலாம்.

நல்ல செயல்களினால், பிறர் மனதில் இடம் பெறும், சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் நற்பலன் தருவர். மனக்கஷ்டம் விலக தெய்வ வழிபாடு மற்றும் சுற்றுலா சென்று வருவதில் விருப்பம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களுடன் அதிகம் பேச வேண்டாம். இளைய சகோதரர் தேவையான உதவி வழங்குவர். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். புத்திரர் சுதந்திரமாக செயல்பட விரும்புவர். எதிரியால் இருந்த தொல்லை விலகும். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர், கடமை உணர்ந்து பணிபுரிவீர்கள். பெண்கள், இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். மாணவர்கள், சாகச விளையாட்டுக்களில் ஈடுபடக்கூடாது.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபடுவதுடன், காகத்திற்கு எள் கலந்த, தயிர் சாதம் வைக்கலாம்.

நண்பர் கருத்தின் உண்மையை உணர்ந்து ஏற்கும், கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சனி, புதன், குரு, சுக்கிரனின் அமர்வு சிறப்பான வகையில் உள்ளது. சுறுசுறுப்பாக பணிபுரிந்து நிம்மதியும், புகழும் பெறுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி உண்டு. வீடு, வாகனத்தில் அதிக பயன்பாட்டு வசதி பெற, சில மாற்றம் செய்வீர்கள். புத்திரர் தமக்குரிய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவர். உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத் துணை வழி சார்ந்த உறவினர், உங்களின் நல்ல குணம் பாராட்டுவர். வெளியூர் பயணத்தில் தகுந்த பாதுகாப்பு பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில், புதியவர்களின் ஆதரவினால் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், உறவினர் குடும்பம் ஒற்றுமையாகி வாழ உதவுவீர்கள். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து, நல்ல தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதுடன், சிவனடியாருக்கு வஸ்திரம் தானம் வழங்கலாம்.

தன் செயலில் வரும் குறையை, தாமதமின்றி சரி செய்யும், துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், சுக்கிரன், கேதுவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. புதிய திட்டம் நிறைவேற்ற அனுகூலம் உண்டு. விலகிப் போன உறவினர், சொந்தம் பாராட்டுவர். குடும்பத்தில் சந்தோஷம் திகழும். வீடு, வாகனத்தில் திருப்திகர நிலை உண்டு. புத்திரர் வெளியிடம் சுற்றுவதில் ஆர்வம் கொள்வர். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். இல்லறத் துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், ஊக்கமுடன் செயல்பட்டு பாராட்டு, வெகுமதி பெறுவீர்கள். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள், ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலை உணர்ந்து செயல்படுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், வடைமாலை சாற்றி, பிரசாதம் வழங்கலாம்.

தன்னைப் புகழ்ந்து பேசுபவரிடம், கவனமுடன் பழகும், விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய், சந்திரன் ராகு நற்பலன் தருவர். தன – தான்ய யோகம் அமைந்து, குடும்பம் செழிப்பாக இருக்கும். பேசும் வார்த்தை வசீகரமாகும். நிலுவைப் பணி எளிதில் நிறைவேறும். முருகப் பெருமானின் நல்லருள் துணை நிற்கும். புத்திரர் ஆன்மிக கருத்துகளை அறிவதில் ஆர்வம் கொள்வர். உங்கள் வாழ்வியல் சிறப்பு கண்டு எதிரி வியந்து விலகுவர். இல்லறத் துணை நல்ல ஆலோசனை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் வருகிற நன்மையை, கவனமுடன் பாதுகாப்பீர்கள். பணியாளர், சீரான ஓய்வு, சத்தான உணவு உண்பதால் புத்துணர்வு பெறுவீர்கள். பெண்கள், ஆடை, ஆபரணம் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், படிப்பில் சந்தேகம் தீர, நண்பர் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதுடன், நலிவுற்ற ஏழைக்கு மருத்துவ உதவி வழங்கலாம்.

ஒருமுகத் தன்மையுடன் பணிகளில் ஈடுபடும், தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்ப்பதால், நற்பெயரை பாதுகாக்கலாம். செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவதால், மற்ற பணிகளில் எளிதாக ஈடுபட இயலும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். உறவினர்களை இயன்ற அளவில் உபசரிப்பீர்கள். புத்திரரின் செயல்களை கவனித்து வழி நடத்துவது நல்லது. சீரான ஓய்வு உடல் நலம் காக்கும். இல்லறத் துணை சேமிப்பு பணம் தந்து உதவுவார். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். இயந்திர பிரிவு பணியாளர் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், தாய் வீட்டு உதவி கிடைத்து மகிழ்வீர்கள். மாணவர்கள், புதியவர்களை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன், வேத சாஸ்திரம் பயிலும் மாணவர்களுக்கு உதவலாம்.

அன்பு நிறைந்த செயலால், சமூகத்தில் நன்மதிப்பு பெறும், மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு கேது, குரு, சனி, சுக்கிரன் அளப்பரிய வகையில் நற்பலன் தருவர்.
எதிர்பார்ப்பு நிறைவேற புதிய வழி பிறக்கும். வாழ்வில் பெற்ற நன்மைகளுக்காக இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். புத்திரர் கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். எதிர்ப்பாளரிடம் விலகுவது நல்லது. இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் வெற்றிப் பாதையில் நடைபோடும். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பு, பண வரவு பெறுவர். பெண்கள், குடும்ப நலன் பேணுவதில் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள், ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன், தொழில் சிறக்க நல்வழி சொன்னவர்க்கு உதவலாம்.

சிறு நன்மையும், பெரிதென கருதி மகிழும், கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆதாய ஸ்தானத்தில் உள்ள சூரியன், புதன், சுக்கிரன் தாராள அளவில் நற்பலன் தருவர். கடின உழைப்பினால் சேர்த்த பணம், பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். உடன் பிறந்தவரின் கருத்துகளை விமர்சிக்க வேண்டாம். சமூகத்தில் பெற்ற நற்பெயர் மேலும் நன்மதிப்பு பெறும். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். புத்திரர் புரிதல் திறன் வளர்ந்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத் துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் போட்டியை மாற்று உபாயத்தினால் சரி செய்வீர்கள். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள், இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். மாணவர்களுக்கு படிப்புக்கான பண வசதி திருப்திகர அளவில் கிடைக்கும்.

பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதுடன், தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றலாம்.

சமயோசிதமாக செயல்புரிந்து, சிரமம் வராமல் தவிர்க்கும், மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு தன, பாக்ய ஸ்தான அதிபதியாகிய செவ்வாய் உச்ச பலத்துடன் உள்ளார். குரு, சூரியன், புதன் கூடுதலாக நற்பலன் தருவர். ஆரோக்கிய உடல் நலம் அமைந்து பணியில் ஈடுபடுவீர்கள். பண வரவு அதிகம் பெற புதிய வாய்ப்பு வரும். ஆடம்பரச் செயல்களில் இருந்த ஆர்வம் குறையும். உறவினர் வருகை வாழ்வில் முக்கிய திருப்பம் உருவாக்கும். புத்திரர் அறிவாற்றலில் சிறந்து விளங்குவர். இல்லறத் துணையின் மனதில், உங்கள் மீதான நம்பிக்கை குறையாமல் நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். பணியாளர் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள், மனதில் புதிய, ஞானம் கிடைத்து பெருமிதம் கொள்வர்.

பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதுடன், இனிப்பு பதார்த்தம் படையல் செய்து பிரசாதம் வழங்கலாம்.

 

Leave a Reply