பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினால் தலை வெட்டப்படும். பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
சமீபத்தில் ஜே.என்.யூ மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கமிட்டதாக கூறப்படும் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாரெல்லாம் முழக்கமிடுகிறார்களோ அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று மேற்குவங்க மாநில பா.ஜ.க. தலைவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த ராகுல் சின்ஹா மாற்றப்பட்டு தற்போது புதிய தலைவராக திலிப் கோஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தலைவராக புதியதாக பதவியேற்ற உடனேயே சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசிய பேச்சு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியும்,
நேற்று முன் தினம் கட்சியின் தொண்டர்களிடையே பேசிய திலிப் கோஷ், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று இங்கு முழக்கமிடுபவர்களின் தலை மேலிருந்து 6 இன்ச் வெட்டப்படும். காலங்கள் தற்போது மாற்றமடைந்து இருக்கிறது. மேலும், தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் செயல்படும் தலைவர்கள், நடிகர்கள், பாடகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்களால் நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மொத்தமாக கூண்டோடு வங்தேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜே.என்.யூ விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்துள்ள பாஜக அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் திலிப் கோஷின் பேச்சு எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றியது போல் உள்ளதாக பாஜக தலைவர்களே அதிருப்தி அடைந்துள்ளனர்.