பெயர் மாறுகிறது மேற்குவங்க மாநிலம். புதிய பெயர் என்ன?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என ஒருங்கிணைந்த வங்காளம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. பின்னாளில் கிழக்கு வங்கம் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்கிற தனி நாடாக மாறியது. இந்நிலையில் கிழக்கு வங்காளம் ஒன்றே இல்லாத நிலையில் மேற்கு வங்காளம் என்கிற ஒன்று தேவையா என்கிற கேள்வி கடந்த பல ஆண்டுகளாக எழுந்து வந்தது. இந்த மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பெங்காலி மொழியில் பங்களா அல்லது பங்கா என்றும் ஆங்கிலத்தில் பெங்கால் என்றும் மாற்ற தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெயர் மாற்றத்திற்கான முடிவு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சிறப்பு சட்டசபை கூட்டத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதி கூட்டவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.