நேற்று கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியிடம் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
நேற்று கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் மேற்கிந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 321 ரன்கள் குவித்தனர். சாமுவேல் மற்றும் பொலார்டு ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி மளமளவென ஸ்கோரை உயர்த்தியது. சாமுவேல் 126 ரன்களும், பொல்லார்டு 61 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 322 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி வீளையாடிய இந்திய அணியினர் தங்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். தவான் மட்டும் ஓரளவிற்கு தாக்கு பிடித்து 68 ரன்கள் எடுத்தார். ஜடேஜா அவுட் ஆகாமல் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி,41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.
சாமுவேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.