ஜெயலலிதா மறைவால் சொத்துக்குவிப்பு வழக்கு என்ன ஆகும்?

ஜெயலலிதா மறைவால் சொத்துக்குவிப்பு வழக்கு என்ன ஆகும்?

1தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி வடிவம் பெற்று தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா இறந்துவிட்டதால் இனி இந்த வழக்கு என்ன ஆகும் என்ற கேள்விக்குறி பலர் மனதில் எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து விடாது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவை தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயிரோடு உள்ளனர். எனவே அனைத்துவித விசாரணையும் முடிந்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் சட்டப்படி தீர்ப்பு வழங்கும்.

ஒரு வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் அந்த வழக்கு அவர் இறந்தால் முடிந்துவிடும். ஆனால் இந்த வழக்கில் ஜெயலலிதா மட்டுமே காலமானதால் சசிகலா உள்பட மற்ற மூவரும், தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகளும் உயிரோடு இருப்பதால் வழக்கு தொடர்ந்து நடைபெறும். எக்காரணம் கொண்டும் வழக்கு முடித்து வைக்கப்படமாட்டாது என்று ஆச்சார்யா கூறினார்.

ஆனால் இதுகுறித்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கூறியபோது, ‘பொதுவாக ஒரு வ‌ழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இற‌ந்துவிட்டால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 394-ன்படி வழக்கு கைவிடப்படும். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா இறந்து, மற்றவர்கள் உயிரோடு இருப்பதால் அந்த சட்டம் பொருந்துமா என்பது சந்தேகம்தான். ஏற்கெனவே கர்நாடக ஐகோர்ட் இவ்வழக்கில் நால்வரையும் விடுவித்ததால் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பே தேவையில்லை.

அதேநேரம் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதா உயிரோடு இருந்து, வழக்கை முழுமையாக நடத்தியுள்ளார். அனைத்து விதமாக விசாரணையும் முடிந்து தீர்ப்பு மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை வெறுமனே முடித்து வைக்க முடியாது. எதுவாக இருந்தாலும் அதை சுப்ரீம் கோர்ட் தான் முடிவு செய்யும்” என்று கூறினர்.

Leave a Reply