ஈட்டிங் டிஸ் ஆர்டர் என்றால் என்ன?
வெள்ளையான தோலே அழகு’ என்பதைப்போல, ‘ஒல்லியாக இருப்பதே அழகு’ என்ற தவறான புரிதல் பெண்களிடம் அதிகம் உள்ளது. `சைஸ் ஜீரோ’ எனப்படும் மெல்லிய இடை மீதான மோகம் இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்துவருகிறது. `ஆரோக்கியமாக இருப்பதைவிட ஒல்லியாக இருப்பது முக்கியம்’ என்ற மனோபாவம் தீவிரம் அடையும்போது, அது ஓர் உளவியல் குறைபாடாக மாறுகிறது. இதை, ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்கிறார்கள்.
பொதுவாக, 18 – 35 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம்தான் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது. `உணவால் எடை அதிகரிக்கிறது’ என்ற எண்ணம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு தீவிரமாக இருந்தால், அவர்கள் ஈட்டிங் டிஸ்ஆர்டர் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்தக் குறைபாடு, `அனோரெக்ஸியா நெர்வோசா (Anorexia nervosa)’, `புலிமியா நெர்வோசா (Bulimia nervosa)’ என இரண்டு வகைப்படும்.
அனோரெக்ஸியா நெர்வோசா
இவர்களுக்கு, பசி இயல்பாக இருக்கும். ஆனாலும், எங்கே எடை கூடிவிடுமோ என்ற பயம் காரணமாக, சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள். ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காக, எப்போதும் பட்டினி கிடப்பது இவர்கள் வழக்கம்.
இவர்கள், சராசரி பி.எம்.ஐ அளவைவிட 85 சதவிகிதத்துக்குக் கீழ் இருப்பார்கள். உதாரணத்துக்கு, 20 வயதான ஒருவரின் உயரம் ஆறு அடியாக இருந்தால், 70 கிலோ எடை இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இவர்கள் 50 கிலோவுக்குக் கீழேதான் இருப்பர்.
இவர்களுக்கு, ‘எடை கூடிவிடுமோ, உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து நாம் குண்டாகிவிடுவோமோ’ என்ற பயம் அதிகமாக இருந்துகொண்டே இருக்கும்.
மற்றவர்களோடு தங்கள் உடல் எடையை ஒப்பிட்டுக்கொண்டே இருப்பதுடன், அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
பயத்தில் சரிவர சாப்பிடாததால், போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அதன் பிறகும், ஆரோக்கியத்துக்காகச் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள அவர்களது மனம் முன்வராது.
எப்போதும் ஒருவிதப் பரபரப்புடன் இருப்பர். அடிக்கடி உடற்பயிற்சியில் ஈடுபடுவர். மேலும், சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது.
குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்து தங்களைத் தனிமைபடுத்திக்கொள்வர். இவை எல்லாம் இந்தப் பாதிப்பின் தீவிரமான அறிகுறிகள்.
புலிமியா நெர்வோசா
இவர்கள், `உடல் எடை அதிகரிக்கும்’ என்ற பயத்திலேயே சாப்பிடாமல் இரண்டு மூன்று நாட்கள் இருப்பார்கள். பிறகு, ‘சாப்பிடாமல் உடலைக் கெடுக்கிறோமே’ என்ற எண்ணத்தில், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். உடனே, மீண்டும் குற்றவுணர்வு கொண்டு, சாப்பிட்டவற்றை வலுக்கட்டாயமாக வாந்தி எடுக்க முயல்வார்கள். மலமிளக்கிகள் எடுத்துக்கொண்டு குடலை காலி செய்வார்கள்.
சாப்பிட்டவுடன் அதிகப்படியான உடற்பயிற்சி செய்து, சாப்பிட்ட உணவை, சக்தியைச் செலவழிப்பார்கள்.
தங்கள் உடல் எடை மற்றும் உடல் அமைப்பைப் பற்றிய அதிகப்படியான கவலை இருந்துகொண்டே இருக்கும்.
மனதில் சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், செயல்படுத்த முடியாது.
எவ்வளவு சாப்பிட்டாலும், பசி நீங்கிய உணர்வு இல்லாமல் இருப்பார்கள். ‘சாப்பிட்டதை வாந்தி எடுத்துவிட்டால் கலோரி உடலில் தங்காமல், உடல் எடை ஏறாது’ என்ற தவறானப் புரிதலால், வாந்தி எடுக்க மாத்திரைகள் உட்கொள்வதால், பற்கள் கெட்டுப்போவது, உணவுக் குழாயில் பாதிப்பு, நரம்புத்தளர்ச்சி, போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
அதிகப்படியான உணவு உட்கொள்ளும் பாதிப்பு (Binge Eating Disorder)
உடல்பருமனாக இருக்கும் சிலர், உடல் எடையைக் குறைக்க, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில நாட்கள் வரை கடுமையான டயட்டைக் கடைப்பிடித்து, ஒரு நாளைக்குத் தேவையான 1,500 – 2,000 கலோரி அளவைவிட குறைவாக உண்ணுவார்கள். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே, ஏதேனும் ஒரு மனதுக்குப் பிடித்த உணவுப்பொருளின் வாசனையில் மயங்கி அடுத்த சில நாட்களுக்கு 4,000 – 5,000 கலோரி அளவுக்கு உணவை, வெளுத்துக்கட்டுவார்கள்.
இவர்களுக்கு, உடல் எடையைக் குறைத்து, ஃபிட்டாக இருக்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால், நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிக்குமே தவிர, எடை குறையாது.
டயட்டில் இருந்தாலும் உடல் எடை குறையவில்லையே என்ற மனக்கவலையில் இருப்பார்கள்.
இவர்களால் எந்த வேலையிலும் முறையாக கவனம் செலுத்த முடியாது. குற்ற உணர்வில், ஒருவித
மனஅழுத்தம், மனப்பதற்றத்தில் இருப்பார்கள்.
மன நல ஆலோசனை மூலமே இவர்களைக் குணப்படுத்த முடியும்.
தீர்வு
ஈட்டிங் டிஸ்ஆர்டர் பாதிப்புகளுக்கு மருந்து, மாத்திரை தீர்வுகளைவிட மனநல சிகிச்சையே முக்கியம். ‘காக்னிக்ட்டிவ் பிஹேவியர் தெரப்பி’ மூலமாக கவுன்சலிங் கொடுத்து, இவர்களின் உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்துவது மட்டுமே இதற்கான சிறந்த தீர்வு. ஈட்டிங் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மையில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதற்கு, குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் முக்கியம். எண்ணங்களை மாற்றினால் அனைத்தும் மாறும் என்பதைப் பக்குவமாகப் பேசிப் புரியவைக்க வேண்டும். `ஒல்லியாக இருப்பதுதான் ஸ்டைல், அழகு, மாடர்ன்’ என்பதைப் போன்ற அசட்டு எண்ணங்களில் இருந்து வெளியேறி, நாம் குண்டாக இருக்கிறோமா ஒல்லியாக இருக்கிறோமா என்பது பிரச்னை அல்ல. ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதே முக்கியம்!
ஈட்டிங் டிஸ்ஆர்டர் பாதிப்புகள்
பொதுவாக, ஈட்டிங் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ளவர்களுக்கு தங்கள் தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை இருக்கும்.
தங்களைப் பற்றிய சுய மதிப்பீடு குறைவாகவே இருக்கும்.
யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத பிடிவாத குணமும், உணவுப் பழக்கங்களில் மிகவும் கண்டிப்பும் கட்டுப்பாடும் இருக்கும்.
ஈட்டிங் டிஸ்ஆர்டர் நாட்பட்ட சிக்கலாகத் தொடரும்போது, அவர்களுக்குத் தோல் உட்பட பல்வேறு உறுப்புகளும் பாதிக்கும்.
ரத்த அழுத்தம் குறைவதால் ,இதயம்கூட பாதிக்கப்படும்.
ரத்தசோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், உடலில் உள்ள உப்புக்களின் அளவு மாறுபாடு, அதனால் ஏற்படும் ஜீரண மண்டலப் பிரச்னைகள், மலச்சிக்கல், தைராய்டு பிரச்னை, `ஆஸ்டியோபொரோசிஸ்’ எனும் எலும்பு அடர்த்தி குறைதல், மாதவிடாய் சுழற்சி பாதிப்பு, குழந்தைப்பேறு பாதிப்பு போன்ற தீவிரமான பிரச்னைகள் ஏற்படும்.