தனித்து போட்டி அறிவிப்பால் தள்ளாடும் தேமுதிக
திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை. தனித்து போட்டி என சமீபத்தில் விஜயகாந்த் அறிவித்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் தலைமையை ஏற்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என பிரேமலதா அறிவிப்பு செய்தார். இந்நிலையில் கேப்டன் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து அதிமுக, திமுக தவிர ஏனைய கட்சிகள் குவியும் என எதிர்பார்த்த விஜயகாந்துக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாமக தனித்து போட்டி என்பதில் உறுதியாக உள்ளது. பாஜகவோ, எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் இல்லையேல் தனித்து போட்டியிட தயார் என தேமுதிகவுக்கு உறுதியாக அறிவித்துவிட்டது. மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வரவேண்டும் என்றுதான் அதன் தலைவர்கள் இன்னமும் அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கின்றனர். தேமுதிக தலைமையை ஏற்று விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அவர்கள் தயாராக இல்லை என்பதையே சமீபத்திய நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன,.
தமாக மற்றும் ஒருசில கட்சிகள் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றதே தவிர தேமுதிக கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை. எனவே கேப்டன், தனது தலைமையிலான கூட்டணிக்கு வாருங்கள் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் இன்னும் ஒருகட்சி கூட அவருடைய தலைமையை ஏற்க தயாராக இல்லாததால், தேமுதிக வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது. சீட் கேட்டு விண்ணப்பித்தவர்கள் கூட தற்போது பின்வாங்கி வருவதாக கூறப்படுகிறது.