எதிர்க்கட்சிகளின் மதுவிலக்கு போராட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன?

எதிர்க்கட்சிகளின் மதுவிலக்கு போராட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன?

tasmac1தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பான நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு போராட்டம் பூரண மதுவிலக்கு வேண்டும் என்றுதான். கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்தை கையில் எடுத்து கடந்த சில வாரங்களாக தமிழகத்தை பெரும் பரபரப்பில் வைத்துள்ளது. இந்த பரபரப்பில் கடைசியாக வேறு வழியில்லாமல் காலத்தின் கட்டாயத்தின் காரணமாக கலந்து கொண்ட ஒரு கட்சியாக திமுகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டம் நல்ல நோக்கமாக இருந்தாலும், தற்போது திடீரென இந்த போராட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதில் நடுநிலை மக்களுக்கு சில சந்தேகங்களும் தோன்றியுள்ளது. சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிராக பெரிய எதிர்ப்பலை எதுவும் பொதுமக்களிடம் காணப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அதிமுகவுக்கு கூடுதல் சாதகமாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்று தெரியாமல் சிலகாலம் தத்தளித்தை நாட்டு மக்கள் அறிவார்கள்

இந்த நிலையில் தத்தளித்து கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த ஒரே விஷயம் டாஸ்மாக். பூரண மதுவிலக்கை இன்னும் சில மாதங்களில் முதல்வரே கொண்டு வரும் திட்டத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் திடீரென போராட்டத்தை தீவிரப்படுத்தி ஒருவேளை அரசு மதுவிலக்கை அறிவித்தால், அது தங்களால்தான் வந்தது என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திடீர் போராட்டங்களை செய்து வருகின்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த திமுக, ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி இல்லாததால் பாமக எம்.எல்.ஏக்களின் துணையோடு ஆட்சி செய்தது. அப்போதெல்லாம் டாக்டர் ராமதாஸ் நினைத்திருந்தால் அரசை மிரட்டி ஒரே நாளில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்திருக்க முடியும். அதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது மெஜாரிட்டி அதிமுக ஆட்சியில் ஏன் போராட்டம் நடத்த வேண்டும்?

கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வைகோ போராட்டம் நடத்துவது காமெடியின் உச்சக்கட்டம் என நடுநிலை பொதுமக்கள் பேசிவருகின்றனர். கலிங்கப்பட்டி என்பது ஒரு சிறிய ஊர். அந்த ஊர் மக்களிடம் இனிமேல் யாரும் குடிக்காதீர்கள் என்று வைகோவும் அவரது மதிப்பிற்குரிய தாயாரும் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும், மறுநாளே அந்த டாஸ்மாக் கடை தானாகவே மூடப்பட்டுவிடும். யாரும் வராத கடையை மூடிவிடத்தானே வேண்டும். அதை செய்யாத வைகோ, டாஸ்மாக் கடைமுன் போராட்டம் நடத்துவது அறியாமையின் உச்சக்கட்டம் என பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர். தன்னுடைய பிறந்த ஊரின் மக்களை தனது கட்டுப்பாட்டில் வைக்க தெரியாதவர் எப்படி நாட்டை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்?

மதுவுக்கு இணையாக தீமை விளைவிப்பது புகை பிடிக்கும் பழக்கம். மது குடிப்பதால் குடிப்பவருக்கு மட்டுமே உடல்நலக்கேடு ஏற்படும். ஆனால் புகைபிடிப்பவர் விடும் புகையால் அருகில் இருக்கும் புகை பிடிக்காதவர்களுக்கும் தீமை ஏற்படும். அப்படிப்பட்ட சிகரெட் விற்பனை செய்யும் விநியோகஸ்தராக வைகோ அவர்களது மகனே இருக்கும் நிலையில் அவர் மதுவின் தீமை குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளதாக நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். புகையிலை பொருட்களையும் விற்பனை செய்வதை தடை செய்ய அரசு முன்வந்தால் அதனை நாங்கள் வரவேற்போம் என்று கூறும் வைகோ, அதேபோல் மது விற்பனை செய்வதை தடை செய்ய அரசு முன்வரும்போது வரவேற்க வேண்டியதுதானே. ஏன் அரசு தடை செய்யாத போதே இவர் போராட்டங்கள் நடத்துகின்றார் என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

பாமக நிறுவனர் ராம்தாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர் தங்களுடைய கட்சிக்காரர்கள் யாரும் இனிமேல் குடிக்கக்கூடாது என்று அன்புக்கட்டளை இட்டால் போதும். அந்த கட்சியின் தொண்டர்கள் உண்மையிலேயே இருதலைவர்களையும் மதிப்பவர்களாக இருந்து குடிப்பதை நிறுத்திவிட்டாலே டாஸ்மாக் வசூலில் பாதி குறைந்துவிடும். பாமக எந்த ஊரில் பொதுக்கூட்டம் போட்டாலும் அந்த ஊரில் உள்ள டாஸ்மாக் கடைகளின் விற்பனை இருமடங்காக இருப்பதில் இருந்தே இரு தலைவர்களின் பேச்சை அவர்களின் தொண்டர்கள் எந்த அளவுக்கு மதிக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம் என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்பது நன்றாக தெரியும். அப்படியே ஒருவேளை மதுவிலக்கு வந்தால் அரசுக்கு மட்டுமின்றி அவருக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதை அவர் புரிந்தவர். அதனால் இதுவரை அமைதி காத்த அவர், தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் மதுவுக்கு எதிராக போராடியதை பார்த்து பதறிப்போய் அவரும் தன் பங்கிற்கு மதுவிலக்கு குறித்து ஆட்சி வந்தவுடன் ஆய்வு செய்வோம் என வெகுஜாக்கிரதையாக தனக்கே உரிய வார்த்தை ஜாலத்தை உபயோகித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் சீரியஸாக விடும் அறிக்கையையே இப்போது யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படியிருக்கும்போது இதுபோன்ற அறிக்கையை யாரும் நம்ப மாட்டார்கள் என்று சொல்லவே தேவையில்லை.

எனவே உண்மையிலேயே எதிர்க்கட்சியினர்களுக்கு பூரண விலக்கு தான் குறிக்கோள் என்றால் உங்கள் கட்சி தொண்டர்களிடம் மதுக்கடை பக்கம் போக வேண்டாம் என்று அறிவுரை கூறுங்கள். யாருமே மதுவை வாங்க செல்லவில்லை என்றால் மதுக்கடைகள் தானாகவே மூடப்பட்டுவிடும். மான் போலவும் மயில் போலவும் குத்தாட்ட டான்ஸ் ஆடும் பெண்களுக்கு மார்க் போட நேரம் இருக்கும் தொலைக்காட்சிகளுக்கு மதுவின் தீமை குறித்த ஆவணப்படமோ, அறிவுரை செய்திகளையோ இதுவரை ஒளிபரப்ப நேரம் இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. தங்களுடைய டிஆர்பியை எகிற செய்ய  மதுவிலக்கு குறித்து வெட்டி விவாதங்கள் நடத்துவதால் மட்டும் மதுவை ஒழித்துவிட முடியாது என்பதை சாட்டிலைட் தொலைக்காட்சிகள் புரிந்து கொள்ளும் நாள் வருமா? என்பது தெரியவில்லை.

எந்த ஒரு பிரச்சனையும் இன்னொரு பெரிய பிரச்சனை வரும்வரைதான் நீடிக்கும். அதேபோல் மதுவை விட வேறு ஏதாவது பெரிய பிரச்சனை வந்தால், உடனே தற்போது போராட்டங்கள் நடத்தி வரும் கட்சிகள் அனைத்தும் பூரண மதுவிலக்கு கொள்கையை அப்படியே விட்டுவிட்டு அந்த பிரச்சனையை நோக்கி சென்றுவிடும் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை நடுநிலை பொதுமக்கள் புரிந்து வைத்துள்ளதால்தான் இந்த போராட்டங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை எவ்வித ஆதரவும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply