தக்காளி விலையை விட ஆப்பிள் விலை குறைவு? ஏன் இந்த மாற்றம்

தக்காளி விலையை விட ஆப்பிள் விலை குறைவு? ஏன் இந்த மாற்றம்

ஏழைகளின் ஆப்பிள் என்று தக்காளியை கூறுவார்கள். ஆனால் இன்று ஆப்பிள் விலையை விட தக்காளியின் விலை அதிகமாக உள்ளது. ஆப்பிள் ஒருகிலோ ரூ.100ம், தக்காளி ஒரு கிலோ ரூ.,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது தக்காளி விலையின் திடீர் விலையேற்றம் ஏன்? என்பதே சாமனியனின் கேள்வியாக உள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டத்தலைவர் பெரியண்ணன் அவர்கள் இதுகுறித்து கூறியதாவது:

“தமிழ்நாட்டில் நீலகிரி, சென்னைத் தவிர எல்லா மாவட்டங்களிலும் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாக கோவை, திண்டுக்கல், திருப்பூர், தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக அளவுல தக்காளி சாகுபடி இருக்கு. கிட்டத்தட்ட 98 சதவிகிதம் விவசாயிகள் உயர் விளைச்சல் தரும் வீரிய ரக தக்காளியைத்தான் பயிர் செய்கிறார்கள். சராசரியா ஏக்கருக்கு 25 முதல் 35 டன் வரை மகசூல் கிடைக்கும். 60 நாட்களில் காய்ப்புக்கு வரும் தக்காளியை தொடர்ந்து 90 நாட்கள் வரை தினம் தோறும் பறிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஓட்டன்சத்திரம் மார்க்கெட் முக்கியமானது. இங்கு தக்காளி உள்பட எல்லாக் காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது. அதுக்கு அடுத்த படியா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகில் உள்ள நாச்சிப்பாளையம் , தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ராயக்கோட்டை ஆகிய இரண்டும் தக்காளி விற்பனைக்கு என்று இயங்கும் தனிமார்க்கெட்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய பருவமழை தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் இறவைப் பயிரான தக்காளி நடவு செய்ய போதுமான தண்ணீர் வசதி விவசாய கிணறுகளில் இல்லை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் தக்காளி இந்த ஆண்டு சில நூறு ஏக்கரில் கூட நடவு செய்யப்படவில்லை. அனைத்துப் பாசன அணைகளும் காய்ந்து கிடக்கின்றன. கோவை மாவட்டத்திற்கு ஜூன், ஜுலை மாதங்களில் கிடைக்கும் தென்மேற்கு பருவ மழை இதுவரை கிடைத்த பாடில்லை.
எங்கு பார்த்தாலும் வறட்சி தாண்டவமாடுகிறது. தொழுவத்தில் இருக்கும் கால்நடைகளுக்கும் கூட பருக தண்ணீர் கொடுக்க முடியவில்லை. வந்த விலைக்கு சந்தையில் அதை விற்றுக்கொண்டிருக்கிறான் விவசாயி.

அது ஒருபுறம் இருக்க, தக்காளி விலை தாறு மாறாக இறங்கியதில் சந்தைக்கு கொண்டுபோன தக்காளியை தார்ரோட்டில் கொட்டிவிட்டு வெறும் கையுடன் வீடு திரும்பிய நாட்களும் உண்டு”

”ஒரு ஆண்டு விலை வீழ்ச்சி…. இன்னொரு ஆண்டு விலை ஏற்றம். இந்த இரண்டையும் சமாளிக்க என்ன வழி?”

”வழி இருக்கிறது. விளைச்சல் அதிகரிக்கும் காலங்களில் தக்காளி பழங்களை சேமித்து வைக்கும் குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் இங்கு அதிகம் இல்லை. தக்காளி அதிகம் விளையும் இடங்களில் அதிக அளவில் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை அரசாங்கம் கட்டிக் கொடுக்கவேண்டும். விலை வீழ்ச்சி ஏற்படும் சமயத்தில் அதை குப்பையில் கொட்டாமல், குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைத்து, பற்றாக்குறை ஏற்படும் பொழுது அதை விற்பனைக்கு அனுப்பலாம். இதனால், விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கும். அதே போல் நுகர்வோர்க்கும் நியாமான விலையில் கொடுக்கமுடியும்.

மேலும் தக்காளி விலை சரியும் சமயத்தில், ஜூஸ்,ஊறுகாய், ஜாம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விலை வீழ்ச்சியை விவசாயிகள் கட்டுப்படுத்தலாம். விவசாயக்குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இதற்கான பயிற்சிகளை வேளாண்துறை வாயிலாக கொடுக்க வேண்டும். இப்போதே கிலோ 120 ரூபாய் விலை என்றால் எதிர்வரும் ஒணம் பண்டிகை சமயத்தில் தக்காளி ஆப்பிளாகலாம். வானம் மனது வைத்தால் மறுபடியும் தக்காளி விவசாயம் தகதகக்கும். நல்ல மழை வரட்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply