அப்துல் கலாமின் டுவிட்டர் கணக்கு என்ன ஆகும்? உதவியாளர் பதில்
அப்துல்கலாமின் டுவிட்டர் கணக்கில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஃபாலொ செய்து வருகின்றனர். அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட டுவிட்டரில் தான் ஷில்லாங்கில் பேசவிருப்பதாக பதிவு செய்திருந்தார். அதுவே அவர் பதிவு செய்த கடைசி டுவிட்டர் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் மறைந்துவிட்டதால் அவரது டுவிட்டர் கணக்கு என்ன ஆகும்? என பல்லாயிரக்கணக்கான டுவிட்டர் பயனாளிகள் எண்ணியிருக்கும் நிலையில் அப்துல் கலாம் மறைந்தாலும், அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை புதிய முறையில் தொடர்ந்து செயல்பாட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலாமின் நெருக்கிய உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது: மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள கலாமை போற்றும் வகையில் அவரது எண்ணங்களையும், கருத்துகளையும், இந்தியா குறித்த அவரது எதிர்பார்ப்புகளையும் மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டும் வகையில் அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தொடர்ந்து செயல்படும். அவர் எழுதிய புத்தங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள், அவரது பொன்மொழிகளை தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்று கூறினார். இதனால் அவரை டுவிட்டரில் ஃபாலோ செய்பவர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.