மஞ்சள் காமாலைக்கு என்ன பரிசோதனை?

yellow_2579344f

மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உடலியல் ரீதியில் சிவப்பு ரத்த அணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும்போது, ஹீமோகுளோபினிலிருந்து ‘பிலிருபின்’ என்றொரு மஞ்சள் நிறப்பொருள் உருவாகும். இது ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்கு வந்து, பித்தநீர் மூலம் மலத்திலும் சிறுநீரிலும் வெளியேறும்.

ரத்தத்தில் பிலிருபின் 0.2 – 0.8 மி.கி. / டெ.லி. என்ற அளவில் இருந்தால் அது சரியான அளவு. கல்லீரல் பாதிக்கப்படும்போது பிலிருபின் வெளியேற முடியாமல், ரத்தத்தில் தேங்கும். அப்போது 2 மி.கி./ டெ.லி. என்ற அளவுக்கு மேல் கூடிவிடும். இதன் விளைவாகக் கண், தோல், நகம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறும். பசியெடுக்காது. வாந்தி, வயிற்று வலி வரும். களைப்பாக இருக்கும். இதைத்தான் மஞ்சள் காமாலை என்கிறோம்.

கல்லீரலில் பிலிருபின் இரண்டு விதமாக இருக்கும். தனித்த பிலிருபின் (Free bilirubin) 0.2 0.6 மி.கி./டெ.லி. என்ற அளவிலும், இணைந்த பிலிருபின் (Conjugated bilirubin) 0.2 மி.கி. / டெ.லி. என்ற அளவிலும் இருக்கும்.

காமாலை வகைகள்:

1. கல்லீரல் உள்நோய் காமாலை (Intra Hepatic Jaundice)

வைரஸ் கிருமிகள் தாக்குவது, மது குடிப்பது, மருந்துகளின் பக்க விளைவு, எலிக் காய்ச்சல், தன்தடுப்பாற்றல் நோய், பரம்பரை ரத்தக் கோளாறுகள், கல்லீரல் சுருக்கம், கொழுப்புக் கல்லீரல், கல்லீரல் புற்றுநோய் போன்ற காரணங்களால் கல்லீரல் பாதிக்கப்படும்போது, இது ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, ஹெபடைட்டிஸ், ஹெபடைட்டிஸ்-ஏ, ஹெபடைட்டிஸ்-பி காமாலைகள்.

2. கல்லீரல் வெளிநோய் காமாலை (Post Hepatic Jaundice):

பித்தப்பையில் வீக்கம், கல், புற்றுநோய், பித்தக் குழாய் அடைப்பு, கணைய அழற்சி, கணையப் புற்றுநோய் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. அடைப்புக் காமாலை (Obstructive Jaundice) என்பது இதற்கு இன்னொரு பெயர்.

3. கல்லீரல் சாராத காமாலை (Pre Hepatic Jaundice):

மலேரியா, தாலசீமியா, சிக்கில் செல் ரத்தசோகை, ரத்த ஆர்.ஹெச். ஒத்திசையாமை, பரம்பரை என்சைம் கோளாறுகள் காரணமாக, இவ்வகை காமாலை ஏற்படுகிறது. ரத்த அழிவுக் காமாலை (Haemolytic Jaundice) என்றும், இதை அழைப்பதுண்டு.

4. குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே காமாலை (Physiological jaundice) காணப்படலாம். இது பிறந்த இரண்டாவது வாரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

என்ன பரிசோதனை?

# காமாலையால் பாதிக்கப்பட்டவருக்குக் கல்லீரலின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று கணிக்கும் பரிசோதனைகள் மூலம் காமாலையின் வகை, காரணம், தீவிரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்கு ‘கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனைகள்’ (Liver Function Tests LFT) மேற்கொள்ளப்படும்.

# ரத்தத்தில் மொத்த பிலிருபின், தனித்த பிலிருபின், இணைந்த பிலிருபின், ஆல்புமின், குளோபுலின் எவ்வளவு உள்ளன என்று கணிக்கும் பரிசோதனை இது.

# இத்துடன் ஏ.எல்.பி.(ALP), ஏ.எஸ்.டி. (AST), ஏ.எல்.டி. (ALT), ஜி.ஜி.டி. (GGT) பரிசோதனைகளும் செய்யப்படும். ரத்தத்தில் என்சைம்களை அளக்கும் பரிசோதனை இது.

# ஹெச்பிஎஸ்.ஏஜி. (HbsAg) பரிசோதனையில் காமாலையின் வைரஸ் வகையை அறிய முடியும்.

# கல்லீரல் வீக்கத்தைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்/ சி.டி. ஸ்கேன்/ எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.

# இந்தப் பரிசோதனைகளை எந்த நேரத்திலும் செய்துகொள்ளலாம். முன் ஏற்பாடு எதுவும் தேவையில்லை.

# கல்லீரல் புற்றுநோயை அறிய கல்லீரல் திசுப் பரிசோதனை (Biopsy) செய்யப்படும்.

# சிறுநீரில் பித்த உப்புகள் (Bile salts and bile pigments) பரிசோதிக்கப்படும்.

பரிசோதனை முடிவுகள்

# ஹெபடைட்டிஸ் வகை காமாலையில் தனித்த பிலிருபின், இணைந்த பிலிருபின், ஏ.எஸ்.டி., ஏ.எல்.பி., அளவுகள் இரண்டு மடங்கு அதிகமாகவும், ஏ.எல்.டி., பல மடங்கு அதிகமாகவும் இருக்கும்.

# ரத்த அழிவுக் காமாலையில் தனித்த பிலிருபின் மட்டும் அதிகமாக இருக்கும். இணைந்த பிலிருபின், ஏ.எல்.பி. அளவுகள் சரியாக இருக்கும். சிறுநீரில் மஞ்சள் காமாலை தெரியாது.

# அடைப்புக் காமாலையில் தனித்த பிலிருபின் சரியாக இருக்கும். இணைந்த பிலிருபின் அதிகமாக இருக்கும். ஏ.எல்.பி. பத்து மடங்கு அதிகமாக இருக்கும்.

# மலேரியாவில் ரத்த அழிவுக் காமாலை ஏற்படும்.

# சில பரம்பரைக் காமாலைகளின் போது ரத்தத்தில் தனித்த பிலிருபின் அதிகமாக இருக்கும். ஆனால், சிறுநீரில் மஞ்சள் காமாலை தெரியாது. இந்தக் காமாலையில் பெரிய ஆபத்து இல்லை.

# கல்லீரல் பாதிக்கப்படும்போது ஆல்புமின் அளவு குறையும்; குளோபுலின் அளவு மிகும். இவற்றின் ஒப்பீட்டு அளவு கல்லீரல் சுருக்க நோயை அறிய உதவும்.

# ஹெச்பிஎஸ்.ஏஜி. ரத்தத்தில் காணப்படுமானால், அது ஹெபடைட்டிஸ்-பி வைரஸ் காமாலை.

# ஜி.ஜி.டி. அளவு அதிகம் என்றால், மதுவால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

# சிறுநீரில் பித்த உப்புகள் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையை உறுதி செய்கிறது.

# காமாலையின் வகையைப் பொறுத்துச் சிகிச்சை அமையும்.

# அடைப்புக் காமாலைக்கு அறுவைசிகிச்சை தேவைப்படும். அப்போது அறுவைசிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும்.

Leave a Reply