கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், தேர்தலுக்கு பின்பும் எதிரும் புதிருமாக இருந்த பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது இணக்கமான உறவில் இருக்கின்றது. பிரதமர் நரேந்திர மோடி தனது வங்கதேச சுற்றுப்பயணத்தின்போது மேற்குவங்க முதல்வரையும் உடன் அழைத்து சென்றதில் இருந்தே இருவரும் தங்கள் பகையை மறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் இந்த இரு தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள திடீர் நட்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் துணைத்தலவர் விமர்சனம் செய்துள்ளார். நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்டமான பேரணி ஒன்றில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன் சிங்குடன் அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் சென்று வருமாறு மம்தா பானர்ஜியிடம் வேண்டுகோள் வைத்தோம். அதற்கு அவர், “நான் தனியாகவே வங்கதேசத்துக்கு சென்று வருவேன்’ என்று அப்போது தெரிவித்தார்.
ஆனால் தற்போது மோடி பிரதமராக ஆட்சியில் இருக்கிறார். பாஜக ஆட்சியில் “வங்கதேசத்துக்கு மோடியுடன் சென்று வாருங்கள்’ என்று அவர்கள் அழைக்கும்போது, நான் தனியாகச் செல்வேன் என்று மம்தா பானர்ஜி கூறவில்லை. “நாம் சேர்ந்து செல்வோம்’ என்று மோடியிடம் சொல்கிறார். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இது என்ன வகையான நட்பு என்றும் புரியவில்லை.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, “நான் ஆட்சிக்கு வந்தால், இங்கு 35 ஆண்டுகளாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் அடக்குமுறை ஆட்சியிலிருந்து மக்களுக்கு விடுதலை பெற்றுத் தருவேன்’ என்றும், “வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன், புதிய தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படும், வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவேன்’ என்றும் பல்வேறு வாக்குறுதிகளை மம்தா மக்களுக்கு அளித்தார்.
ஆனால், அவர் முதல்வராக பதவியேற்றதும் மேற்கு வங்கத்தில் நிலவிவந்த அடக்குமுறையின் அளவு இரண்டு மடங்கானது. வளர்ச்சித் திட்டங்கள், புதிய வேலைவாய்ப்புகள் எங்கு போனது என்று தெரியவில்லை.
அதுபோல்தான் தில்லியில் ஓராண்டுக்கு முன்பு புதிய ஆட்சி அமைந்தது. அவர்களும் ஆட்சிக்கு வருவதற்கு முன் மம்தாவைப்போல் “வேலை வாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள், புதிய தொழிற்சாலைகள் போன்றவற்றைக் கொண்டு வருவோம்’ என்றனர். ஆனால் பதவியேற்று ஓராண்டு ஆன பின்பும் அவற்றைக் காணவில்லை.
பதவிக்கு வந்த உடன் முதலில் நாடெங்கிலும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மோடி பேசினார். பின்னர், “உனக்கு வேலைவாய்ப்பு தர இயலாது. எனவே தூய்மை இந்தியா என்ற பெயரில் துடைப்பத்தை எடுத்து தெருவைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்’ என்று வேலை கேட்ட மக்களிடம் கூறினார்.
சிறிது நாள்கள் கழித்து தூய்மை இந்தியா குறித்த பேச்சு ஓய்ந்ததும், “மக்களே வாருங்கள், தில்லியில் நாம் கூடி யோகா செய்வோம்’ என்று மோடி கூறுகிறார்.
தற்போது வேலைவாய்ப்பு குறித்து நமது பிரதமர் பேசவதில்லை. தினம் தினம் புதுப்புதுத் திட்டங்கள் அவரால் அறிமுகமாகின்றன.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்களை மறக்கடிக்கச் செய்யவே இந்த புதிய திட்டங்கள் அனைத்தும் அறிமுகப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது முன்னாள் வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓராண்டுக்குள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் அமலாகும் என்று மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.
அவர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்துவிட்டது. அவர் வீரர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னவானது என்று தெரியவில்லை. ஆனால், தற்போது ராணுவ வீரர்கள் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். மோடியிடம் கேட்டால் “இதுகுறித்து பின்னர் கேளுங்கள், நாங்கள் தற்போது யோகாசனம் செய்து கொண்டிருக்கிறோம்’ என்கிறார்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய இருவரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. அதுகுறித்து கவலைப்படுவதுமில்லை. இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் இந்த ஒற்றுமைதான் அவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள புதிய நட்புக்கு காரணமாக உள்ளது என்றார் ராகுல் காந்தி.