இயக்குனர் சந்தோஷ் சிவனின் ‘இனம்’ படத்தில் ஒருசில காட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றது என்ற காரணம் கூறி வானத்திற்கு பூமிக்கும் குதித்து ஆவேசமான மதிமுக செயலாளர் வைகோ, ‘இன்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் வெங்கையா நாயுடு தனி ஈழத்துக்கு ஆதரவு தர முடியாது என்று பகிரங்கமாக பேட்டி அளித்ததற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் பெட்டிப்பாம்பாக வைகோ அடங்கியிருப்பது ஏன்? உங்கள் ஈழப்பற்றெல்லாம் ஆளை பொறுத்துதான் பொங்குமா?
பாரதிய ஜனதா உங்களுக்கு கொடுத்தது வெறும் ஏழு தொகுதிகள். அதில் ஒன்றோ அல்லது இரண்டோ வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த ஒன்றிரண்டு தொகுதிக்காக இத்தனை வருடங்கள் காப்பாற்றி வந்த தனி ஈழம் கொள்கையை இழப்பதுதான் ஒரு தலைவரின் கொள்கையா?
அன்புமணி மீது கல்வீசி தாக்குதல் செய்தார்கள் என்ற செய்தி வந்த மறுநிமிடமே வைகோவிடம் இருந்து கண்டன அறிக்கை வந்தது. ஆனால் வெங்கையா நாயுடுவின் பேட்டி வந்து ஒருநாள் முடியப்போகிறது இன்னும் வாய் திறக்காத வைகோவின் ஈழத்தமிழர் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். கருணாநிதிக்கு வைகோவுக்கு என்ன வேறுபாடு இருக்கிறது? வைகோவும் ஓட்டுக்காக எதையும் செய்வார் என்ற சராசரி அரசியல்வாதிதானா?
இந்த கேள்விகள் எல்லாம் இன்றைய ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வந்தவை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றோம். கட்சி வேறுபாடின்றி பாராட்டு பெறும் ஒரே அரசியல்வாதி வைகோதான். மேற்கண்ட கேள்விக்கு அவர் என்ன பதில் தருகிறார் என்பதை இந்த கேள்விகள் கேட்டவர்களை போலவே நாங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம்.