ரத்தசோகைக்கு என்ன பரிசோதனை?

test_2561878f

ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிட குறையும்போது, ஏற்படுகிற நிலைமையை ‘ரத்தசோகை’ (Anaemia) என்கிறோம்.

உடலின் பல உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனையும் சத்துகளையும் சுமந்து செல்வது சிவப் பணுக்கள்தான். இவற்றில் உள்ள ஹீமோகுளோபின் (Haemoglobin) எனும் இரும்புச்சத்துப் பொருள்தான், இந்தப் பணியைச் செய்கிறது. எனவே, ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும்.

ஆரோக் கியமாக வாழும் நடுத்தர வயது ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்/டெசி லிட்டர் வரையிலும், பெண்களுக்கு 13 முதல் 15 கிராம்/டெ.லி வரையிலும் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் 12 கிராமுக்கு அதிகமாகவும், வளரிளம் பருவத்தினருக்கு 13 கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இது ஆண்களுக்கு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலையே ‘ரத்தசோகை’.

காரணம் என்ன?

1. சத்துக் குறைபாடு

l ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கு இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்-பி12, வைட்டமின்-சி, ஃபோலிக் அமிலம் தேவை. நாம் சாப்பிடும் உணவில் இந்தச் சத்துகள் தேவையான அளவுக்கு இல்லாதபோது ரத்தசோகை ஏற்படுகிறது.

2. ரத்தம் இழப்பு

l இரைப்பைப் புண், புற்றுநோய், மூல நோய் (Piles), ஆஸ்பிரின், புருஃபென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளின் பக்கவிளைவு காரணமாக மலத்தில் ரத்தம் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு இருக்கும். இதனால் ரத்தசோகை வருவதுண்டு.

3. இதர கோளாறுகள்

l குடலில் கொக்கிப்புழு தொல்லை, பரம்பரை ரீதியாக ஏற்படுகிற சிவப்பணுக் கோளாறு, ரத்தப் புற்றுநோய், தைராய்டு பிரச்சினை, சிறுநீரகக் கோளாறு, மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் காரணமாகவும் ரத்தசோகை ஏற்படுவது உண்டு.

வகை

ரத்தசோகை ஏற்படுகிற காரணத்தைப் பொறுத்து ரத்தசோகை பல வகைப்படும். முக்கியமானவை:

l மைக்ரோசைட்டிக் அனீமியா

l மேக்ரோசைட்டிக் அனீமியா

l நார்மோசைட்டிக் அனீமியா

என்ன பரிசோதனை?

l சாதாரண ஹீமோகுளோபின் பரிசோதனை மூலமாகவே ஒருவருக்கு ரத்தசோகை இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

l இந்தப் பரிசோதனையை எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.

l ரத்தசோகையின் வகையைக் கண்டறிய ‘மீன் கார்ப்பஸ்குலர் வால்யூம்’ (Mean Corpuscular Volume MCV) எனும் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இது ரத்தச் சிவப்பணுக்களின் சராசரி அளவைச் சொல்லும்.

இது 80 எஃப்.எல்லுக்கும் (Femto litre – Fl) குறைவாக இருந்தால், ‘மைக்ரோசைட்டிக் அனீமியா’ (Microcytic Anaemia).

l 80 முதல் 90 எஃப்.எல்.வரை இருந்தால் ‘நார்மோசைட்டிக் அனீமியா’ (Normocytic Anaemia).

l 90 எஃப்.எல்லுக்கும் அதிகமாக இருந்தால் ‘மேக்ரோசைட்டிக் அனீமியா’ (Macrocytic Anaemia). அதாவது, மெகலோபிளாஸ்டிக் அனீமியா (Megaloblastic Anaemia).

l ரத்த அணுக்களின் வடிவம், அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பரிசோதித்தும் (Peripheral smear study) ரத்தச் சோகையின் வகையை அறியலாம்.

வகையின் முக்கியத்துவம்!

l வெறும் இரும்புச்சத்து மட்டும் குறைவாக இருந்து ரத்தசோகை ஏற்படுமானால், அதை ‘மைக்ரோசைட்டிக் அனீமியா’ என்கிறோம். இதற்கு இரும்புச்சத்து மிகுந்த உணவு, மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். .

l தைராய்டு பிரச்சினை, காசநோய், சிறுநீரகப் பிரச்சினை, ஹெச்.ஐ.வி. தொற்று போன்றவற்றால் ஏற்படுவது ‘நார்மோசைட்டிக் அனீமியா’. இந்த வகையான நோயைக் குணப்படுத்த, அதற்குக் காரணமான அடிப்படை நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த வேண்டும்.

l வைட்டமின்-பி12, ஃபோலிக் அமிலம் குறைபாடு காரணமாக வருவது ‘மேக்ரோசைட்டிக் அனீமியா’. இதற்கு இந்தச் சத்துகளைத் தரும் மாத்திரைகளையும் உணவையும் சாப்பிட வேண்டும்.

l இப்படி ரத்தசோகையை வகைப்படுத்தும்போது, அதற்குரிய காரணம் தெரிந்துவிடும். அதற்கேற்ப சிகிச்சை முறையை அமைத்து ரத்தசோகையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

Leave a Reply