ஒரு பிரச்னை என்று எடுத்துக் கொண்டால் அதனை எவ்வாறு கையாள்வது, என்ன முடிவெடுப்பது என்பது போன்ற விஷயங்களை ஆராயும் போது, நமது மூளை ஒரு விஷயத்தைச் சொல்லும். மனம் ஒரு விஷயத்தைச் சொல்லும்.
பெரும்பாலானோர், மனது சொல்வதையே கேட்பார்கள். சிலர் மூளை சொல்வதைக் கேட்பார்கள். இதில் என்ன மாறுபாடு உள்ளது என்று கேட்கலாம். ஒரு விஷயத்தில் மூளை சொல்வதற்கும், மனம் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
அதாவது, ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடலாமா என்ற கேள்வி எழும் போது, உடனே மூளை, பணம் செலவாகும், உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று சில குறிப்புகளை எடுத்துரைக்கும். ஆனால் மனமோ, இன்று ஒரு நாள் தானே ஜாலியாக போய் வரலாம் என்று குதூகலத்துடன் பச்சைக் கொடி காட்டிவிடும்.
இதுபோலத்தான் ஒவ்வொரு பிரச்னையிலும் மூளையும், மனமும் இரு பக்கங்களில் இருந்து கொண்டு குரல் கொடுக்கும். அதில் சரியான குரலை தேர்வு செய்துவிட்டால் ஒரு மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம்.
சிலர் மூளையின் குரலைக் கேட்காமலேயே செயல்படுவார்கள். அவர்களது மனம் என்ன சொல்கிறதோ, எதற்கு ஆசைப்படுகிறதோ அதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்வார்கள். இதுபோல மனம் போன போக்கில் செல்பவர்கள் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். அவர்கள் மூளையின் குரலை மியூட்டில் வைத்து விடுவார்கள்.
வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் ஒரு போல அணுகுவது சரியாக இருக்காது. உணர்வுப் பூர்வமான விஷயங்களுக்கு மனம் சொல்வதைக் கேட்கலாம். முக்கிய விஷயங்களில், எதிர்கால சிந்தனை, நோக்கம், தொழில், படிப்பு போன்றவற்றுக்கு மூளை சொல்வதைக் கேட்பதே சரியாக இருக்கும்.
ஏன் என்றால், மூளை என்பது தராசு போல அனைத்தையும் தட்டில் வைத்து நிறுத்தி எது சரியோ அதை எடுத்துக் கூறும். பொதுவாகவே இந்த முடிவு 90 சதவீதம் மாறுபட வாய்ப்பு ஏற்படாது.
ஆனால், மனம் என்பது மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போன்றது. ஒரு சமயம் சொல்லும் விஷயத்தை அடுத்த நொடியே மாற்றிக் கொள்ளும்.
உதாரணத்துக்கு மற்றவர்கள் ஒருவரை ரொம்ப நல்லவர் என்று சொன்னால் அவர் நல்லவர் என்று நினைக்கும் மனம், வேறு சிலர், அவரைப் பற்றி குறை கூறும் போது உடனே அவரை கெட்டவர் என்று எண்ணும். அதனிடம் பெரிய தராசு எல்லாம் எதுவும் இல்லை, வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் மனதால் முக்கியமான விஷயங்களுக்கு முடிவு சொல்ல இயலாது.
எனவே, சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் மனசு சொல்வதைக் கேட்டாலும், மிகப்பெரிய விஷயங்களுக்கு மூளையின் பேச்சைக் கேட்பதே சரியாக இருக்கும்.