ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு எப்போது? புதிய தகவல்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வரும் நிலையில் தேர்தலுக்கு முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என சுப்பிரமணியசுவாமி உள்பட பலவேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு மே 14ஆம் தேதியில் இருந்து ஜூன் 29ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடக அரசு தரப்பும், ஜெயலலிதா தரப்பும் தங்கள் வாதங்களை மே 13ஆம் தேதிக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி வலியுறுத்தியுள்ளார். இரு தரப்பினர்களும் 13ஆம் தேதிக்குள் தங்கள் வாதத்தை முடித்தால்தான், கோடை விடுமுறை காலத்தில் வழக்கின் ஆவணங்களை படிக்த்து, இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்து, தீர்ப்பு எழுதுவதற்கும் போதிய கால அவகாசம் இருக்கும் என்று நீதிபதி கருதுவதால் இத்தகைய காலக் கெடுவை அவர் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இவ்வழக்கில் பல்வேறு முக்கிய அம்சங்களை தெரிவிக்க வேண்டி இருப்பதால், வாதிட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆச்சார்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது