ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது?
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் நான்கு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1991 முதல் 96ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர்களுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார், இதன் பின்னர் நான்கு பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பெங்களூரு ஐகோர்ட் நான்கு பேரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் தரப்பட்டதாக புத்தகம் ஒன்றில் கூறியிருந்தார். இதனையடுத்து, தமிழகத்தை சேர்ந்த பி.ரத்னம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் ஆச்சார்யா ஆஜரான போது, அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாக கூறினார். எனவே அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அதனை அடுத்து இந்த வழக்கை விசாரிப்பதாக கூறி நான்கு வாரங்களுக்கு ரத்னம் வழக்கை ஒத்திவைத்தனர்.