ஜெயலலிதா வீடு திரும்பும் தேதி. இன்று முடிவு செய்யப்படுகிறது
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது பூரண குணமாகிவிட்டதாகவும் அவர் வீடு திரும்பும் தேதி இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வட்டாரம் கூறியபோது முதல்- அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளதாகவும், அவர் வீட்டில் இருந்து வரும் வழக்கமான உணவை சாப்பிடுவதாகவும், அவரது உடல் நிலை குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தனர்.
மேலும் முதல்வர் தங்கியுள்ள மருத்துவமனை முன் இன்று 6-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டிருப்பதாகவும், ஜெயலலிதா வீடு திரும்பும் தேதியை இன்று அறிந்த பின்னரே அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.