நேதாஜி இறந்தது எப்போது? மேற்குவங்க அரசு வெளியிட்ட ஆவணத்தில் புதிய தகவல்
நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என அவருடைய உறவினர்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்ததன் காரணமாக சமீபத்தில் மேற்குவங்க அரசு ஒருசில ஆவணங்களை பொதுமக்கள் பார்வையில் வைத்தது. அந்த ஆவணங்களில் நேதாஜி உண்மையாகவே எப்போது இறந்தார் என்ற தகவல் இருப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி, பார்மோசா என்ற பகுதியில் நடந்த விமான விபத்தில் நேதாஜி பலியானதாக அப்போதைய வானொலி செய்தி தெரிவித்தது. ஆனால் நேதாஜியின் ஆதரவாளர்கள் இதை நம்பவில்லை. அவர் உயிருடன்தான் இருப்பதாக கூறிவந்தனர்.
இந்நிலையில் மேற்குவங்க அரசு வெளியிட்ட ஆவணங்களின்படி, நேதாஜி 1948ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்ததாகவும், சீனாவில் உள்ள மன்சூரியா என்ற இடத்தில் அவர் 1948 வரை வாழ்ந்ததாகவும், அவருக்கு நெருக்கமானவரான தேவ்நாத் தாஸ் என்பவர் கூறியுள்ளதாக ஆவணங்களில் உள்ளது. மேலும், சீனாவில் இருந்து கொண்டே இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள், உலக நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், சூழ்நிலைகளை நேதாஜி கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே நேதாஜியின் மரணம் 1948ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவராக நேதாஜி இருந்த போதும், இரண்டாம் உலகப் போரின்போது பல தலைவர்களை நேதாஜி சந்தித்துள்ளார். அத்துடன் ஜப்பான் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை சிங்கப்பூரில் தொடங்கினார். அதன்பின், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தை கடுமையாக எதிர்த்தார். மேலும், வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த நிலையிலேயே தற்காலிக அரசை கடந்த 1943-ம் ஆண்டு நேதாஜி நிறுவி செயல்படுத்தி வந்தார். அந்த அரசில் தேவ்நாத் தாஸ் முக்கிய உறுப்பினராக செயல்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.