மக்கள் பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் பதில் அளிக்காதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்” எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதற்கு பதில் அளிப்பதை விட ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதைத்தான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடமையாகக் கருதினார். குற்றம் புரிந்தவர் என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவருக்கு சட்டப்பேரவையில் வாழ்த்து கூறலாமா?
திமுக உறுப்பினர்களும், மற்ற எதிர்க்கட்சிகளும் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசியதற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளிக்கவில்லை.
உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளதாக முதல்வர் அளித்த புள்ளி விவரம் சரிதானா? என்று விவசாயிகள் சந்தேகிக்கின்றனர்.
தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்கு நீண்ட காலம் ஒப்பந்தம் செய்துகொள்வது ஏன்? என்று விளக்கம் அளிக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
ஆவின் பால் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் பற்றி முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. மடியில் கனமில்லை என்றால் சட்டப்பேரவையில் அந்த விவரங்களை தெரிவித்திருக்க வேண்டாமா?
அமைச்சர் என்ற நிலையில் இருந்து விடுபட்டு, முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க இனியாவது முயற்சிக்க வேண்டும்.”
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.