இந்தியா முழுவதும் மதுவிலக்கு சாத்தியமா? வெங்கையா நாயுடு பதில்
தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த்த வேண்டும் என கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசின் தரப்பில் இருந்து ‘இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு அறிவிக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம்’ என்ற ரீதியில் பதில் சொல்லி வருகின்றது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு இதுகுறித்து கருத்து கூறுகையில், ” மக்கள், பெண்கள் ஒற்றுமையுடனும், எழுச்சியுடனும் குரல் எழுப்பினால் மட்டுமே நாடு முழுவதும் மதுவிலக்கு சாத்தியம்” என்று கூறியுள்ளார்.
தமிழக சுற்றுப்பயணத்திற்காக இன்று சென்னை வந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பில் ரகசியம் உள்ளது என்று காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. இதை அரசியலாக்க கூடாது. அது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், மக்கள், பெண்கள் ஒற்றுமையுடன், எழுச்சியுடன் குரல் எழுப்பினால் மட்டுமே நாடு முழுவதும் மதுவிலக்கு சாத்தியம் ஆகும்.
இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் குரல் கொடுக்கின்றனர். ஆனால், தீவிரவாதிகள், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உள்பட கடுமையான தண்டனை வழங்குவது அவசியம் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
இந்திய நாட்டின் மதிப்பு இன்று உலகளவில் உயர்ந்துக் கொண்டு இருக்கிறது. பா.ஜ.க. அரசு லஞ்சம், லாவணியம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் செல்வாக்கு, நற்பெயர் அதிகரித்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்குகிறது.
வலுவான இந்தியாவை உருவாக்கும் முனைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தை தடுக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. தற்போது எதிர்கட்சியாக இருக்கும் போதும் அதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டத்தை ஜனநாயக படுகொலை என்று காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. ஆனால், ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது 1989 ஆம் ஆண்டு 63 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்தார். அதை என்னவென்று சொல்வது?” என்றார்