கேரளா ஒப்புக்கொள்ளும் வரை தென்னக நதிகள் இணைப்பு இல்லை. உமாபாரதி உறுதி

கேரளா ஒப்புக்கொள்ளும் வரை தென்னக நதிகள் இணைப்பு இல்லை. உமாபாரதி உறுதி

riversதென்னக நதிகளை இணைப்பதில் மாநிலங்கள் அளவில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி நேற்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

தென்னக நதிகளை இணைப்பது குறித்து நேற்று மக்களவையில் காஞ்சிபுரம் தொகுதி அதிமுக எம்.பி கே. மரகதம் பேசியபோது, “சிறந்த வெள்ள மேலாண்மைக்கு வழிவகுக்க நாட்டிலுள்ள நதிகளை இணைத்து, நீர் வளங்களைத் திறன்பட பயன்படுத்த முடியும். இது தொடர்பாக மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணையாறு – காவிரி – வைகை ஆகிய நதிகளை இணைத்து, மேற்கு நோக்கிப் பாயும் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளின் உபரி நீரை தமிழகத்தில் பாயும் வைப்பாற்றில் திருப்பிவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பான முன்மொழிவு தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு கேரள மாநில எம்.பி.க்கள் சுரேஷ் கே.சி. வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மரகதத்தின் கேள்விக்கு மத்திய அமைச்சர் உமா பாரதி பதிலளித்தார். அவர் கூறிய பதில் இதுதான்: ‘நதிகளை இணைப்பது நாடு முழுவதுக்கும் பயனளிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நதிகள் இணைப்புக்குத் தமிழகம் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஆனால், அதன் அண்டை மாநிலமான கேரளத்துக்கு இதில் சில ஆட்சேபம் உள்ளது.

இருப்பினும், பிரதமரின் அறிவுறுத்தலின்படி, இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு அளிக்கும் மாநிலங்களில் மட்டும் நதிகள் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறோம். அந்த வகையில், நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கேரள அரசு இசைவு தெரிவிக்கும் வரை, நதி நீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட மாட்டாது என்பதை கேரள உறுப்பினர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழகம் எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்னைக்கு நதிகளை இணைப்பதே தீர்வாக அமையும். வெள்ள மேலாண்மைக்காக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. மழை வெள்ளத்தால் தேசிய அளவில் பெருத்த சேதம் ஏற்படுகிறது. வெள்ளத்தால் ஏற்படும் பொருளாதார சேதத்தை மீட்டாலும், உயிர்ச் சேதத்தை மீட்க முடியாது. நாட்டில் ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் ஆகியவற்றைச் சந்தித்து வருகிறோம். நதிகளை இணைப்பது தொடர்பாக இதுவரை 31 முன்மொழிவு திட்டங்கள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார் உமா பாரதி.

Leave a Reply