பன்றிக்காய்ச்சலை தடுக்க வேண்டிய சென்னை மேயர் எங்கே? மு.க.ஸ்டாலின் கேள்வி

mk.stalinசென்னையில் உள்ளஅயனாவரம் மண்டல அலுவலகம் முன்பாக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் மு.க.ஸ்டாலினின் ஆவேசமாக பேச்சால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

”கடந்த மூன்று ஆண்டுகளில் எனது கொளத்தூர் தொகுதி வளர்ச்சியில் இருந்து 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், இதுவரை 1 கோடி ரூபாய் மட்டுமே மாநகராட்சி பயன்படுத்தி உள்ளது. 6 கோடியை பயன்படுத்துவது குறித்து தெளிவான திட்டங்களை ஒதுக்கி மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் என் ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறேன்.

கடந்த நான்கு ஆண்டுகளில் எனது தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் 500க்கு மேற்பட்டவர்கள் உதவித்தொகை கிடைக்கவில்லை என புகார் மனு அளித்தும், அரசு அதை அலட்சியப்படுத்துகிறது. சென்னையில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த மேயர் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேயர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. மக்கள் மன்றத்தில் மிகப்பெரிய குற்றவாளியாக மேயர் இருக்கிறார்.

தற்போது நடைபெறும் அறப் போராட்டத்துக்கு அரசும், மாநகராட்சியும் செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும்” என ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply