மீண்டும் மாயமாகிவிட்டாரா ராகுல்காந்தி? பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்?
பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் அமெரிக்காவில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஓய்வு எடுப்பதாக சொல்லி ஒருசில வாரங்கள் ராகுல் காந்த் மாயமானார். அவர் எங்கிருந்தார் என்பது காங்கிரஸின் முக்கிய தலைவர்களுக்கே தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ராகுல்காந்தி மாயமாகிவிட்டதாக பாஜகவினர் விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல்காந்தி, தான் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக புகைப்படத்தை வெளியிட்டு பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மிலிந்த் தியோராவும் ராகுல்காந்தி அமெரிக்காவில் இருப்பதை உறுதிப்படுத்தியதோடு அவர், ஐஸ்லாந்து அதிபர் ஓ.ஆர்.கிரிம்ஸன், பிரிட்டன் முன்னாள் வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபேண்ட் ஆகியோருடன் தானும் ராகுல் காந்தியும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள ஆஸ்பென் கருத்தாக்க மையத்தில் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற நிபுணர்கள் உரையாற்றுவது வழக்கம். இந்த ஆஸ்பென் கருத்தாக்க மையத்தில் ‘வீக் எண்ட் வித் சார்லி ரோஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் சென்றுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.