ராகுல்காந்தி எந்த நாட்டிற்கு ‘புத்துணர்வு’ பெற சென்றுள்ளார்? சரியாக பதிலளித்தால் ரூ.1 லட்சம். பாஜக அறிவிப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்த் வெளிநாடு சென்றிருந்தபோது எந்த நாட்டிற்கு அவர் சென்றுள்ளார் என்பதை ரகசியமாக காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்தனர். அதேபோல் தற்போதும் அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டில் உள்ளார் என்பது கட்சியின் மேலிட தலைவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்று தெரிவிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாஜக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் விஜேந்திர சிங் சிசோடியா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ராகுல் காந்தி எந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்பது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் பரிசு தரக் காத்திருக்கிறேன். எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்பதைத் தெரிவிக்காமல், ராகுல் காந்தி வெளிநாடு செல்வது ஏன்? எனத் தெரியவில்லை. இதற்கு முன்பு ஒருமுறை ராகுல் காந்தி வெளிநாடு சென்றபோது, அவர் “புத்துணர்வு’ பெறுவதற்காக வெளிநாடு சென்றதாக காங்கிரஸ் விளக்கம் அளித்தது.
இந்த முறை ராகுல் காந்தி எந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார்? வெளிநாட்டுப் பயணங்களின்போது அவர் எப்படி “புத்துணர்வு’ பெறுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்த தேசமே விரும்புகிறது என்று சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.